கோலாலம்பூர் ஏப்ரல் 2-

மாமா என்ற உறவு முறையை கூறி 2000 வெள்ளி பணம் கேட்டு மோசடி செய்யும் கும்பல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. உங்கள் கைப்பேசிக்கு அழைப்பு வந்தால் உடனடியாக அவர் உண்மையில் உங்கள் உறவுக்காரரா என்பதை யோசித்துப் பாருங்கள்.

+60 11 2823 6122 இந்த எண்ணில் இருந்து உங்களுக்கு ஒரு அழைப்பு வரும். மாமா எப்படி இருக்கின்றீர்கள்? அடுத்த கணம் நீங்கள் யார் என கேட்டால்; என் குரல் கூட உங்களுக்கு தெரியவில்லையா? என அந்தப் பெண் உங்களிடம் கேள்வி கேட்பாள். நீங்களும் உங்களுடைய உறவுக்காரப் பெண்கள் யாராவது ஒருவரை பெயரை கூறினால் அவர்தான் தாம் என்று கூறிக் கொள்வாள்.

பிறகு எனக்கு அவசரமாக 2000 வெள்ளி தேவைப்படுகிறது. உங்களால் அதனை தர முடியுமா என கேட்பாள். நீங்களும் என்ன காரணம் என்று கேட்காமல் பணத்தை உடனடியாக அவர் வழங்கும் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பினால் அடுத்த கணமே அவர் காணாமல் போய்விடுவார்.

என்னிடம் 2000 வெள்ளி இல்லை என நீங்கள் கூறினால் 500 வெள்ளி கிடைக்குமா? என்ற கேள்வியையும் அவர் முன்வைப்பார். இல்லை என்னிடம் பணம் இல்லை. வேறு ஏதேனும் உதவி வேண்டும் என்றால் கேள் என நீங்கள் கூறினால், சரி மாமா நான் மீண்டும் அழைக்கிறேன் எனக்கூறி தொலைபேசி உரையாடலை முடித்துக் கொள்வாள்.

யார் இந்தப் பெண் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இந்த பெண்ணை துணையாகக்கொண்டு இதற்குப் பின்னால் ஒரு கும்பல் செயல்படுகின்றது. மாமா என்ற உறவு முறைக்கு இருக்கும் பாசத்தை முன்னிறுத்தி இந்த நூதன கொள்ளையில் இந்த கும்பல் ஈடுபட்டு வருகின்றது.

மாமா என்று உறவு முறையில் அழைக்கும் பெண்ணுக்கு எப்படி உதவாமல் இருக்க முடியும் என சிலர் கருதுவார்கள் என்ற நிலைப்பாட்டில் இவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

என்னையும் தொடர்பு கொண்டார்கள் என பலர் இந்த செய்தியை படிக்கும் பொழுது உணர்வீர்கள் என்பதை எங்களால் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தச் செய்தியை மற்றவர்களுக்கும் பகிருங்கள். அவர்கள் இதில் சிக்காமல் இருக்கட்டும்.