2018 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மலேசிய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. 62 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்த தேசிய முன்னணி வீழ்ச்சியை சந்தித்தது. தேசிய முன்னணியின் தலைவராக இருந்து 22 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த துன் டாக்டர் மகாதீர் தலைமையில், நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினார்கள்.

தேசிய முன்னணி அரசாங்கத்தை பொறுத்தவரை அதனுள் இந்தியர்களை பிரதிநிதிக்கும் மிகப்பெரிய உறுப்பு கட்சியாக மலேசிய இந்திய காங்கிரஸ்  (மஇகா) விளங்கியது. தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் நம்பிக்கை கூட்டணியில் இந்தியர்களை பிரதிநிதிக்க தனிப்பட்ட கட்சி இல்லாததால் இந்தியர்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் 14ஆவது பொதுத் தேர்தலில் 16 இந்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். தேசிய முன்னணியில் இருந்து கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோ சிவராஜ் சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு டத்தோஶ்ரீ சரவணன் வெற்றி பெற்றார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் ஊழல் நடந்ததாக ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மனோகரன் தேர்தல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்தார். அதன் முடிவில் அத்தொகுதியில் ஊழல் நடந்ததை தேர்தல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதோடு அத்தொகுதியில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. அதோடு டத்தோ சிவராஜ் சந்திரன் 5 ஆண்டுகளுக்கு வாக்களிக்கவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்பதையும் தேர்தல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகம் வகுத்த தேசிய முன்னணி அத்தொகுதியில் பூர்வ குடியைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றது. இதனால் ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.

அதற்கு முன்னதாக மக்கள் நீதி கட்சியின் தலைவர் (பிகேஆர்) டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறையிலிருந்து விடுதலை பெற்ற நிலையில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என முடிவு செய்தார். அவருடைய பார்வை நெகிரி செம்பிலான் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் விழுந்ததால் முதல் இந்திய நாடாளுமன்ற பிரதிநிதியை இழக்கும் சூழ்நிலை உருவானது. டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிமிற்காக டன்யால் பாலகோபால் அப்துல்லா போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்தார்.

இந்நாட்டில் மொத்த ஜனத்தொகையில் இந்தியர்கள் 7 விழுக்காடு. அந்த விழுக்காடு நாடாளுமன்றத்தில் முழுமை பெற்றது.

14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு 16 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்ற வேளையில் பின்னர் அந்த எண்ணிக்கை 14 ஆக குறைந்தது. அந்த 14 பேரில் பலரை இந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு தெரியவில்லை என்பதுதான் இங்கே முதன்மை கேள்வியாக இருக்கின்றது. அவர்கள் இருக்கிறார்களா அல்லது காணாமல் போய் விட்டார்களா என்ற கேள்வியும் சமுதாயத்தின் மத்தியில் எழுகின்றது.

ஈப்போ பாராட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான குலசேகரன், மனித வள அமைச்சராக பொறுப்பேற்று இருக்கின்றார். பூச்சோங் நாடாளமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ தொடர்பு பல்லூடக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கோலா லாங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் சேவியர் ஜெயக்குமார் நீர், நிலம், இயற்கை வள அமைச்சராக பதவி வகிக்கின்றார். சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரான சிவராசா ராசையா புறநகர் மேம்பாட்டு துணை அமைச்சராக பொறுப்பு வகிக்கின்றார். இவர்களைத் தவிர்த்து நடப்பு அரசாங்கத்தில் உள்ள ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தான் நம்து பார்வை..

  • பிரபாகரன் (பத்து நாடாளுமன்றத் தொகுதி)

இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றவர் பிரபாகரன். மலேசிய அரசியல் வரலாற்றில் இடம் பிடித்த இந்த நாயகனை படம் பிடித்து விட வேண்டும் என்று ஒரு கூட்டமே இவரை சுற்றி வந்தது. டத்தோ ஸ்ரீ அன்வாருக்காக தம்முடைய நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்னமும் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கின்றார் பிரபாகரன். அதோடு பத்து தொகுதியில் நடக்கும் சமூக நிகழ்ச்சிகளிலும் பிரச்சனைகளிலும் அவ்வப்போது களமிறங்கி நாளிதழ்களில் வலம் வருகிறார்.

  • சிவகுமார் (பத்து காஜா)

ஆளும் கட்சியில் உள்ள இந்தியர்களில் நடப்பு பிரச்சனை குறித்து உடனுக்குடன் கேள்வி எழுப்புவதில் சிவகுமார் சிறப்பாக விளங்குகிறார். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது உட்பட மாநில ரீதியிலும் நாடாளுமன்ற தொகுதியிலும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனுக்குடன் கேள்வி எழுப்புகிறார். அண்மையில் மித்ரா குறித்தும் இவர் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • சனீஸ்வர நேதாஜி ராயர் (ஜெலுதோங்)

நமது கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட்டது என்பதை அறியாத வேட்பாளராக சனீஸ்வர நேதாஜி இராயர் வழங்குகின்றார். ராயர் என்றால்தான் பலருக்கும் இவரை பரிட்சியம். எதிர்க்கட்சியில் உள்ள இந்திய தலைவர்கள் குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பி நானும் நாடாளுமன்றத்தில் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்வார். சிவராஜ் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய கூடாது. மைக்கா ஹோல்டிங்ஸ் என்னவானது? என்ற கேள்விகள் தான் இவரின் அரசியல் தந்திரம். இதை தவிர்த்து இந்தியர்களின் அடிப்படை பிரச்சனைக்கு இதுவரையில் என்ன நடவடிக்கையை முன்னெடுத்தார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது?

  • கஸ்தூரி பட்டு (பத்து காவான்)

பட்டு என்ற மலேசிய அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத மிகச்சிறந்த தலைவரின் மகள் தான் கஸ்தூரி. இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார் என பலருக்குத் தெரியவே இல்லை. இந்திய சமுதாயத்தின் தேவைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருக்கின்றார்கள் அதில் இவரும் ஒருவர்.

  • கேசவன் (சுங்கை சிப்புட்)

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் 2008, 2013 என இரண்டு தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளரை வீழ்த்தியவர் கேசவன். தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரையும் வென்று இத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துன் சாமிவேலு விற்கு பிறகு சுங்கை சிப்புட் தொகுதி எந்த நிலையிலும் மேம்பாடு காணவில்லை. இவரின் வருகை புத்துயிர் அளிக்கும் என எதிர்பார்த்த அத்தொகுதியின் மக்களுக்கு ஏமாற்றம்தான்.

  • ராம்கர்பால் சிங் ( புக்கிட் ஜெலுதோங்)

தேசிய அரசியலில் உள்ள எதிர்கட்சி தலைவர்கள் உயர்மட்ட தலைவர்கள் குறித்து கேள்வி எழுப்புவது தான் இவரது முதல் வேலை. நடப்பு அரசாங்கம் குறித்தும் அவ்வப்போது கருத்துக்களை வெளியிடும் இவர் நாட்டின் முதன்மையான வழக்குகள் குறித்து அவ்வப்போது பேசுவார். ஆனால் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகள் குறித்து இவர் ஆழமாக பேசி யாரும் கேட்டதில்லை.

  • ஹெட்மன் சந்தாரா ( சிகாமாட்)

மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தை தோற்கடித்த வேட்பாளர் என்ற பெருமையை கொண்டிருக்கின்றார். அதை தவிர்த்து இவர் வேறு எதுவும் செய்யவில்லை. மலேசிய இந்தியர்களின் கல்வி சார்ந்த பிரச்சினைகளுக்கு இவர் குரல் கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் இன்னமும் அதற்கான பதில் கிடைக்கவில்லை.

  • கருப்பையா முத்துசாமி ( பாடாங் செராய்)

கருப்பையா என்ற பெயரில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறாரா என்பதே இங்கு பலருக்கு தெரியவில்லை. அண்மையில் வாரணாசியில் நடந்த பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டில், இவர் விசா நடைமுறை குறித்து கேள்வி எழுப்பியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு இவரின் செயல்பாடுகள் இன்னமும் ரகசியமாகவே இருக்கின்றன.

  • சார்லஸ் சந்தியாகோ (கிள்ளான்)

கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் சார்லஸ் சாந்தியாகோ அரசாங்க பதவியில் அமர்ந்திருக்கிறார். டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் அமைச்சரவையில் இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் மக்களின் மத்தியில் அறிமுகமான வேட்பாளர்களின் எண்ணிக்கை இன்னமும் குறைவாகவே இருக்கின்றது. மக்களின் தேவைகளுக்காக இவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. உங்களின் சேவைகளை நீங்கள் தெரிவிக்க தவறினால் மக்கள் உங்களை மறந்து விடுவார்கள். அதன் பிரதிபலனை 15ஆவது பொதுத் தேர்தலில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.