கோலாலம்பூர்,ஏப்ரல் 4-

வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நடைப்பெறவுள்ள பத்துமலை தேவஸ்தான நிர்வாகத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை முன் வைக்க மலேசிய இந்து ஆகம அணி அமைப்பு தயாராக உள்ளது. எங்களின் வருகையை ஏற்க நிர்வாகம் தயாரா? என அதன் தலைவர் அருண் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்துமலை தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா இல்லத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அண்மையில் அதிரடி சோதனை நடத்தி ரொக்க பணம், நகை, விலையுயர்ந்த பொருட்களை கைப்பற்றியது. மேலும் இது தொடர்பில் ஆணையம் டான்ஶ்ரீ நடராஜாவையும் அவரின் மகன் டத்தோ சிவகுமாரையும் தடுத்து வைத்தது என்பது அனைவரும் அறிந்த தகவலாகும்.

பத்துமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான நில விவகாரம் தொடர்பில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அச்சமயத்தில் இந்த விவகாரம் குறித்து முக்கிய ஆவணங்களை திரட்டி மலேசிய இந்து ஆகம அணி செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தையும் நடத்தி வெளியிட்டது.

மேலும் டான்ஶ்ரீ நடராஜா உட்பட தேவஸ்தானத்தின் முக்கிய பதவிகளில் உள்ள சிலரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் நிர்வாகத்தில் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆகம அணி வலியுறுத்தி கால அவகாசத்தை முன்வைத்தது.

இருப்பினும் இந்த வலியுறுத்தலுக்கு தேவஸ்தானம் சார்பிலிருந்து பதில் வரவில்லை. இந்நிலையில் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி தேவஸ்தான நிர்வாகத்தின் அவசர சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளது என கேள்வியுற்றோம். இந்த கூட்டத்தில் ஆகம அணியினர் கலந்து கொண்டு நில விவகாரம் தொடர்பான குறிப்புகளை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது.

இவ்விவகாரம் தொடர்புடைய மிக துள்ளியமான தகவல்களை கொண்ட ஆவணங்களையும் தேவஸ்தான நிர்வாகத்திடம் பகிர்ந்து கொள்ள நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம் என ஆகம் அணியின் தலைவர் அருண் துரைசாமி விவரித்தார்.

ஆகம அணியின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள எனக்கு தேவஸ்தானம் முன்னதாக பல முறை அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும் இவ்விவகாரம் பொதுவில் தற்பொழுது தெரிய வந்துள்ளதால் கருத்துக்களை பகிர இதுவே சரியான சந்தர்ப்பம் என கருதுகின்றோம்.

நடைபெறவுள்ள கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் தேவஸ்தான நிர்வாகத்தினர் எங்கள் தரப்பிடம் கேள்விகளை முன் வைக்கலாம். நாங்கள் ஏற்கெனவே முன் வைத்த கருத்துகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாரக  உள்ளோம்.

அதே வேளையில் டான்ஶ்ரீ நடராஜா, டத்தோ சிவக்குமார், சேது, அழகன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தங்களின் தேவஸ்தான பொருப்புகளை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆகம அணி தெளிவாக உள்ளது.

மேலும் இவ்விவகாரத்திற்கு பிறகு மலேசிய இந்துக்களின் தாய் கோவிலாக கருதப்படும் பத்துமலை தேவஸ்தானத்தின் கீர்த்தி காக்கப்பட வேண்டும். சமய வழிபாட்டு தளமான அதனை வர்த்தக தளமாக உறுமாற்றி விடக் கூடாது என்பதில் ஆகம அணி உறுதியாக உள்ளது. அப்படி செய்தால் மட்டுமே தேவஸ்தானத்தின் மீது பக்தர்கள் கொண்ட நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்.

இனி வரும் காலங்களில் தேவஸ்தான நிர்வாகத்தின் செயல்பாடுகளை முறையாக கொண்டு செல்வதற்கான வழிமுறைகளையும் ஆகம அணி இக்கூட்டத்தில் பரிந்துரை செய்ய எண்ணம் கொண்டுள்ளது. எனவே வரும் 7ஆம் தேதியன்று நடைப்பெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளோம். இது குறித்து தேவஸ்தான நிர்வாகத்திடமும் கடிதம் அனுப்பியுள்ளோம்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள் சேகரித்த ஆவணங்களையும் எங்கள் கருத்துக்களுக்கும் தேவஸ்தான நிர்வாகம் செவி சாய்க்குமா? என்ற கேள்வியையும் அருண் துரைசாமி முன்வைத்துள்ளார்.