கோலாலம்பூர், ஏப் 7-

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்திலிருந்து மலேசியா மீட்டுக் கொள்வதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் செய்தியாளர்களிடம் அறிவிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்க வேண்டுமென வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பாகும் என சட்ட அமைச்சர் லியு வுய் கியோங் கூறியிருந்தார். அமைச்சர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்பதைவிட இதுகுறித்து அறிவிப்பை பிரதமர் செய்தபோது அமைச்சர்கள் அங்கு இருந்திருக்க வேண்டும் என அம்பிகா சுட்டிக்காட்டினார்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனம் குறித்து தவறான புரிந்துணர்வு ஏற்பட்டதற்கு அவர்கள் அனைவரும் பொறுப்பேற்று இருக்க வேண்டுமென அம்பிகா வலியுறுத்தினார்.

ரோம் சாசனத்தில் கையெழுத்திட்ட முடிவை மீட்டுக்கொள்வதற்கு மலேசியா எடுத்த முடிவு  தவறான ஒன்றாகும் என அவர் சொன்னார். மலேசியா ஒரு தீவு அல்ல. நாகரீகமடைந்த உலகிலிருந்து தனித்து இயங்க முடியாது என அம்பிகா தெரிவித்தார்.

இதனிடையே ரோம் சாசனத்தில் இருந்து மீட்டுக்கொண்ட மலேசியாவின் முடிவு ஏமாற்றத்தை அளிப்பதாக மனித உரிமைகள் மீதான ஆசியான்  அரசாங்கங்களுக்கிடையிலான ஆணையத்தின் மலேசிய பிரதிநிதியான ஈரிக் பால்சன் தெரிவித்தார். இது ஏமாற்றமான முடிவு. புதிய மலேசியாவின் உண்மை நிலையை இது இப்பொழுது படிக்கவில்லை என்றும் அவர் வர்ணித்தார்.