கோலாலம்பூர், ஏப் 7-

ஜோகூர் மந்திரி புசார் ஒஸ்மான் சபியான் நாளை புத்ராஜெயாவில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களை சந்திக்கவிருக்கிறார்.

எனினும் ஜோகூர் மந்திரி புசார் பதவியிலிருந்து ஒஸ்மான் விலகுவதாக  வெளியான தகவலை மந்திரி புசாரின் பத்திரிக்கை செயலாளர் அப்துல் ஹாக்கிம் மறுத்துள்ளார்.

பிரதமரை மந்திரி புசார் சந்திப்பது வழக்கமான ஒன்றாகும். முக்கியமான கூட்டத்திற்கு முன் கூட்டியே கலந்துரையாடல் நடப்பது வழக்கம்.

அதன் அடிப்படையில் மந்திரி புசார் பிரதமரை சந்திப்பது இயல்பாகும் என அப்துல் ஹாக்கிம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் சிங்கப்பூர்- மலேசிய தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக முன்னேற்பாடு கூட்டம் நடைபெறும். சிங்கப்பூர்- மலேசிய தலைவர்களின் 9ஆவது கூட்டம் புத்ராஜெயாவில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்திற்கான முன் ஏற்பாடு நடவடிக்கையாக ஒஸ்மான் சபியான் புத்ராஜெயா செல்கிறார்.

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட சில தரப்பினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். தங்களது சொந்த மற்றும் அரசியல் நலன்களுக்காக பரப்பும் வதந்தி மக்கள் நம்ப கூடாது என அப்துல் ஹாக்கிம்  கேட்டுக் கொண்டார்.

ஜோகூர் மந்திரி புசார் பதவியிலிருந்து ஒஸ்மான் மாற்றப்படுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. புத்ராஜெயாவுக்கும் அரண்மனைக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த வதந்தி பரவியிருக்கிறது.

பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தில் இருந்து மலேசியா வெளியேறுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வெள்ளிக்கிழமையன்று அறிவித்தார். ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் உட்பட பலர் ரோம் சாசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.