அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருவழி நட்புறவு வலுவடைந்துள்ளது! – தூதர் மிருதுல் குமார்
அரசியல்இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருவழி நட்புறவு வலுவடைந்துள்ளது! – தூதர் மிருதுல் குமார்

கோலாலம்பூர் ஏப்ரல் 10-

மலேசிய – இந்திய இருவழி நட்புறவு வலுவடைந்துள்ளது. தற்காப்பு , பொருளாதாரம் , அரசியல் கலாச்சார பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கிடையிலான தொடர்பும் மேலும் வலுவடைந்துள்ளன. இந்தியாவிற்கும் மலேசியாவுக்கும் இடையிலான தொடர்புகள் சிறந்த நிலையில் இருப்பதோடு இரு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கிடையிலான தனிப்பட்ட நட்புறவும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக மலேசியாவுக்கான இந்திய தூதர் மிருதுல் குமார் தெரிவித்தார்.

கடந்த ஒரு ஆண்டு காலமாக தாம் கோலாலம்பூரில் தூதராக இருந்து வருவதாகவும் ஆக்கபூர்வமான மற்றும் தமக்கு முழுமையான திருப்தியாகவும் இந்த பணி இருப்பதாக அவர் சொன்னார்.

எதிர்வரும் ஆண்டுகளில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவும் புரிந்துணர்வும் மேலும் வலுவடையும் என்றும் அவர் கூறினார். மலேசிய இந்திய நட்புறவு புதிய சகாப்தத்தை நோக்கி செல்லும் என்றும் மிருதுல் குமார் கூறினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அவர் மலேசியாவுக்கான இந்திய தூதராக பொறுப்பேற்றார். மலேசியாவின் பத்தாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகவும் இந்தியா இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய்க்கான இறக்குமதி வரியையும் இந்தியா குறைந்திருப்பதாகவும் அவர் சொன்னார். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய மற்றும் மலேசிய தலைவர்கள் அதிகாரப்பூர்வ வருகையையும் மேற்கொண்டுள்ளனர் என்பதையும் மிருதுல் குமார் சுட்டிக் காட்டினார்.

ஆகக் கடைசியாக கடந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவுக்கு வருகை புரிந்ததையும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பொதுத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை கட்டம் கட்டமாக நடைபெறவிருக்கிறது.

தற்காப்பு துறையிலும் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அற்புதமான ஒத்துழைப்பும் நல்ல புரிந்துணர்வும் இருந்து வருகிறது என்பதையும் மிருதுல் குமார் தெளிவுபடுத்தினார். அண்மையில் லங்காவியில் நடைபெற்ற லீமா அனைத்துலக வான்- கப்பல் கண்காட்சியில் இந்திய தற்காப்பு அமைச்சை சேர்ந்த மிகப் பெரிய பேராளர் குழு கலந்து கொண்டதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களும் லீமா கண்காட்சியின்போது சாகசத்தில் ஈடுபட்டு பலரை வியப்பில் ஆழ்த்தியது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்களும் லீமா கண்காட்சியில் கலந்துகொண்டன. மேலும் 90 அதிகாரிகள், விமானிகள் மற்றும் தொழில்நுட்பாளர் களும் லீமா கண்காட்சியில் கலந்து கொண்டது இந்திய மலேசிய தற்காப்பு துறையில் இருந்து வரும் வலுவான ஒத்துழைப்பை காட்டுவதாக மிருதுல் குமார் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன