அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நாட்டைக் காப்பாற்றும் கொள்கை அறிக்கை அமல்படுத்தப்பட்டுவிட்டது! -அமைச்சர் கோபிந்த் சிங்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

நாட்டைக் காப்பாற்றும் கொள்கை அறிக்கை அமல்படுத்தப்பட்டுவிட்டது! -அமைச்சர் கோபிந்த் சிங்

சிரம்பான், ஏப். 12-
நாட்டை நிர்வகிக்கத் தொடங்கி வெறும்  11 மாதங்களே ஆனபோதிலும் ஊழல் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றும்  தனது தேர்தல் கொள்கை அறிக்கையின் முக்கிய அம்சத்தை பாக்காத்தான்  ஹராப்பான் வெற்றிகரமாக  நிறைவேற்றியிருப்பதாகக்  கூறப்பட்டது.

       தாபோங் ஹாஜி மற்றும் பெல்டா போன்ற நாட்டின் முக்கிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தீர்ப்பதில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் இதற்குச் சான்றாகும் என்று ஜசெக துணைத் தலைவர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

    14ஆவது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆளும் பக்காத்தான் அரசாங்கம் தவறிவிட்டதாக  எதிர்க்கட்சியினர் அடிக்கடி கூறி வருவதை அவர் சாடினார்.

  “பக்காத்தான் ஹராப்பான் தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்றால் ஒரு வாரத்திற்கு முன்பு நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன  என்பதைப் பாருங்கள். தாபோங் ஹாஜி மற்றும் பெல்டா விவகாரங்களை நாங்கள்  எழுப்பினோம். இவற்றில் நிச்சயம்  சீரமைப்பைக் கொண்டு வருவோம். இந்நிறுவனங்களில் நடந்த முறைகேடுகளை நாங்கள் அம்பலப்படுத்துவோம் “என்று தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சருமான கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

   “நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். இன்னும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டையும் கொண்டுள்ளோம். இதற்கு ஐந்தாண்டு கால அவகாசம் உள்ளது. 11 மாதங்களுக்குப் பின்னர்   நாம் இன்னும் வலுப் பெற்றிருக்கிறோம். இப்போது  முன்னோக்கிச் செல்ல வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்று இங்குள்ள கம்போங் சிலியாவ், தாமான் ஸ்ரீ இந்தானில் பிரச்சார  உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

     இந்நிகழ்ச்சியில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.    குறுகிய காலமே ஆனாலும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தூய்மையான மற்றும் ஊழலற்ற தலைவர்களைக் கொண்டிருப்பதையும் கோபிந்த் சிங் சுட்டிக் காட்டினார்.

   நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் எஸ். ஸ்ரீ ராம் , தேசிய முன்னணி  வேட்பாளர் டத்தோஸ்ரீ முகமது ஹாசான் ஆகியோரோடு இரு சுயேச்சை வேட்பாளர்களான ஆர். மலர்விழி மற்றும் முகமது நோர் யாசின் ஆகியோரும்  களம் இறங்குகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன