வெற்றி பெற்ற வர்த்தகர்களின் பட்டியலை சீட், செடிக் வெளியிட வேண்டும்!

கோலாலம்பூர், ஆக 17-

இந்தியர்களுக்கு அரசு வழங்கிய பிரத்தியேக நிதியை பெற்று சிறந்த அடைவுநிலையை பதிவு செய்த இந்திய தொழில்முனைவர்களின் விவரங்களை பிரதமர் துறையின் கீழ் செயல்படும் சீட், செடிக் அமைப்புகள் வெளியிட வேண்டுமென ம.இ.கா. தேசியத் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கோரிக்கை விடுத்தார்.

இந்தியர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தெக்குன், எஸ்.எம்.ஈ, அமானா இக்தியார் முதலான நிதி நிறுவனங்களின் வாயிலாக பில்லியன் கணக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. வெளியில் அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்தது என சில தரப்பினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் வெற்றி பெற்ற தொழில்முனைவர்களின் விபரங்கள் வெளியிடபட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மலேசிய இந்தியர் தொழில் முனைவோர் கூட்டுறவு கழகத்தின் (எம்.ஐ.ஈ.சி) ஏற்பாட்டில் 12ஆவது பெர்டானா இளம் தொழில் முனைவோர் விருது விழாவின் அறிமுக விழா இன்று தலைநகரிலுள்ள பிரபல தங்கும்விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் மேற்கண்டவாறு கூறினார்.

திரையுலக கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்க விருது விழா நடைபெறுவது போல் இந்திய தொழில்முனைவர்களின் வெற்றிக்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மதுரைவீரன் தலைமையிலான எம்.ஐ.ஈ.சி இதுபோன்ற விருது விழாவை நடத்தி வருவது பாராட்டுக்குரியது என அவர் புகழாரம் சூட்டினார்.

எம்.ஐ.ஈ.சியின் தலைவர் மதுரைவீரன் கூறுகையில், கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருது விழா இதுவரையில் பல துறைகளில் சாதனை புரியும் இளம் இந்திய தொழில்முனைவர்களை அங்கீகரித்துள்ளது. இந்த விருது விழா வாயிலாக இந்திய இளம் தொழில்முனைவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளவும் தங்களின் வெற்றிகளை பகிர்ந்துக்கொள்ளவும் அவர்களின் சாதனைகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

25 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட இந்திய இளம் தொழில்முனைவர்கள் இன்று முதல் விருது விழாவிற்கான வேட்பாளர் பாரங்களைப் பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வேட்புமனுக்களை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அக்டோபர் மாதத்தில் நேர்க்காணல் வாயிலாக தகுதியானவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். நவம்பர் மாதத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என மதுரைவீரன் குறிப்பிட்டார்.