இங்கிலீஷ் பிரீமியர் லீக் : மானே, சாலாவின் கோல்களில் வீழ்ந்தது செல்சி !

0
2

லிவர்புல், ஏப்.15-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை முதல் முறையாக வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் லிவர்புல் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. இன்னும் நான்கு லீக் ஆட்டங்களே எஞ்சியிருக்கும் வேளையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் லிவர்புல் 2- 0 என்ற கோல்களில் செல்சியை வீழ்த்தியது.

கடந்த சில ஆண்டுகளில் லிவர்புல் அணிக்கு செல்சி ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தது. இந்நிலையில் அன்பீல்ட் அரங்கில் நடந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் சம அளவில் தாக்குதல்களை முன்னெடுத்தன. இருந்தபோதும் இரண்டு அணிகளின் தற்காப்பு அரண்களும் அதனை தகர்த்தெறிவதில் வெற்றி பெற்றன.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 51 ஆவது நிமிடத்தில் ஜோர்டன் ஹென்டர்சன், கொடுத்த பந்தை தாக்குதல் ஆட்டக்காரர் சாடியோ மானே கோலாக்கினார்.  இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் 30 அடி தூரத்தில் இருந்து, முஹமட் சாலா அடித்த அற்புதமான கோல், லிவர்புலில் வெற்றியை உறுதிச் செய்தது.

34 ஆட்டங்களுக்குப் பின்னர் லிவர்புல் 85 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 83 புள்ளிகளுடன் மென்செஸ்டர் சிட்டி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எனினும் லிவர்புலைக் காட்டிலும் மென்செஸ்டர் சிட்டி , ஓர் ஆட்டத்தில் குறைவாக விளையாடியுள்ளது.