கோலாலம்பூர், ஏப். 15-

ஜோகூர் மாநில விவகாரங்களை நிர்வகிப்பதற்கு புதிய மந்திரி பெசாருக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவை. இதற்கு ஆட்சிக்குழு மறுசீரமைக்கப்படுவது விவேகமான நடவடிக்கையாகும் என்று கெராக்கான் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் தெரிவித்தார்.

நடப்பு ஆட்சிக் குழுவைச் சீரமைக்கும் புதிய மந்திரி பெசார் டாக்டர் ஷாருடின் ஜமாலின் நடவடிக்கையை டோமினிக் லாவ் வரவேற்றார்.

ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரின் ஆற்றல் மற்றும் செயல்திறனை அறிந்துள்ள புதிய மந்திரி பெசார் அவர்களில் சிறந்தவர்களைத்தக்க வைத்துக் கொள்வதோடு ஆற்றல் மிக்க இதர சட்டமன்ற உறுப்பினர்களையும் இக்குழுவில் இணைத்துக் கொள்வார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளையில், முன்னாள் மந்திரி பெசாரின் அனுபவங்களை ஒரு படிப்பினையாகக் கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.

பாசீர் கூடாங் சம்பவம் மற்றும் அண்டை நாடான சிங்கப்பூர் ஆறு தொடர்பான கருத்து வேற்றுமை போன்ற பல்வேறு பிரச்னைகளை ஜோகூர் எதிர்நோக்கியது.

இப்பிரச்னைகளுக்கு புதிய மந்திரி பெசார் சுமூகமான முறையில் தீர்வு காண்பார் என்று மாநில மக்கள் காத்திருக்கின்றனர். அரசியல் நன்மையை மட்டும் கருதாமல் மக்கள் நலனுக்கு டாக்டர் ஷாருடின் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கெராக்கான் கட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில் டாக்டர் டோமினிக் லாவ் குறிப்பிட்டார்.

ஜோகூர் மாநிலத்தின் 17ஆவது மந்திரி புசாராக நேற்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட டாக்டர் ஷாருடினுக்கு டோமினிக் லாவ் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.