ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையத்தின் பரந்த நோக்கு! அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வரவேற்பு

புத்ராஜெயா, ஏப்ரல் 15-

ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையப் பிரதிநிதிகளை ஏப்ரல் 15, திங்கட்கிழமை தன்னுடைய அலுவலகத்தில் சந்தித்ததாக தேசிய ஒற்றுமை மற்றும சமூக நலத்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்ததுடன் ஆணைய செயல்பாட்டிற்கும் வரவேற்பு தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையத் தலைவர் பேராசிரியர் ரோசலின் க்ரௌச்சர், இன வேறுபாட்டுக் களைவு ஆணையர் ச்சின் தான், ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணைய மூத்த கொள்கை வகுப்பாளளர் நட்டஷா டி சில்வா ஆகியோர் இந்தப் பேராளர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களுடன் மலேசியாவிற்கான ஆஸ்திரேலியத் தூதர் அண்ட்ரீவ் கோல்சினோவ்ஸ்கி, தூதரக ஆலோசகர் செல்வி நிகோலா கெம்பியன் மற்றும் அரசியல் ஆய்நர் யோசோஃப் பரிட் ஆகியோரும் உடன் வந்தனர்.

மனித உரிமை நடவடிக்கைகளை ஊக்குவித்தல், கலாச்சார ஒருங்கிணைப்பு குறித்தெல்லாம் இந்த நல்லெண்ண சந்திப்பின்போது கருத்து பரிமாறப் பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலிய அரசு கடைப்பிடிக்கும் இணக்கமான போக்கு, அனைவருக்கும் கல்வி, சம வாய்ப்பு ஆகியவற்றுடன் மனித உரிமை ஆணையம் புலம் பெயர்ந்து வாழும் மக்களையும் உள்ளடக்கி ஆஸ்திரேலிய மக்களிடம் நிலைநாட்டும் நல்லிணக்கம் குறித்தெல்லாம் இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சருமான செனட்டர் பொன்.வேத மூர்த்தி தெரிவித்தார்.

தொடர்ந்து, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணையம் தொடர்பான சட்ட முன்வரைவு செயற்குழுவினரையும் இப்பேராளர்க் குழுவினர் சந்தித்தனர். நாட்டு மக்களிடையே தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை, சமரசம், ஒருங்கிணைப்பு மற்றும் சமத்துவக் கூறுகளை இன்னும் வலுப்படுத்த இந்த ஆணையம் துணை நல்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைவாக, ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையத்தின் கட்டமைப்பை நேரில் கண்டறியும் நோக்கில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள விழைவதாகவும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பேராளர்களிடம் தெரிவித்ததை சம்பந்தப்பட்ட பேராளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.