குடிநுழைவுத் துறையில் சிறந்த சேவை: 28 இந்தியர்களுடன் 2ஆவது முறை விருது வென்றார் வினோதினி

புத்ராஜெயா, ஏப்ரல் 15-

2018 ஆம் ஆண்டில், மலேசிய குடிநுழைவுத் துறையில் சிறந்த சேவையை வழங்கியதற்காக அதன் 865 பணியாளர்களுக்கு சிறந்த சேவைக்கா விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

புத்ராஜெயாவில் உள்ள உள்துறை அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விருதளிப்பு விழாவில்; உள்துறை துணை அமைச்சர், டத்தோ முஹமட் அசிஸ் ஜமானும், மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ இண்ட்ரா கைரூல் சைமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் முக்கிய நுழைவாசல்களில் பணியாற்றும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் எப்போதும் நேர்மையுடன் கடமையாற்ற வேண்டும் என குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் கேட்டு கொண்டார். அதேவேளையில் விருதுப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறிக் கொண்ட அவர் இவர்களின் வெற்றி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

புத்ராஜெயா தலைமையகம் உட்பட கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கோலாலம்பூர், பினாங்கு. பேரா என அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள்: கெளரவிக்கப்பட்டனர். இதில் 28 இந்தியர்களும் சிறந்த சேவையை வழங்கியதற்காக கெளரவிக்கப்பட்டனர்.

கோலாலம்பூரில் ஜாலான் டூத்தாவில் உள்ள குடிநுழைவுத்துறையில் பணியாற்றும் வினோதினி வேலாயுதம், அங்கேஸ்வரி சுப்ரமணியமும் இந்த விருதைப் பெற்று கொண்டனர். இதில் வினோதினி வேலாயுதம் குடிநுழைவுத்துறையில் பணியாற்றத் தொடங்கிய கடந்த 11 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அவ்விருதைப் பெற்றிருக்கிறார்