மின்சார ரயில் மோதி இருவர் பலி

கோலாலம்பூர் ஏப்ரல் 16-

சுங்கைபூலோ – கெப்போங் ரயில் தண்டவாளத்தில் 317.7 ஆவது கிலோமீட்டர் பகுதியில் தண்டவாளத்தை கடந்த இருவரை மின்சார ரயில் மோதியதால் அவர்கள் மாண்டனர்.

மியன்மார் பிரஜைகள் என நாம் நம்பப்படும் 30 வயதுக்குட்பட்ட இரண்டு ஆடவர்கள் திங்கட்கிழமை மாலை மணி ஆறு அளவில் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

அருகேயுள்ள பாதைக்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக அந்த இரண்டு ஆடவர்களும் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது அவர்கள் ரயிலில் மோதப்பட்டு மாண்டனர். கெப்போங்கிலிருந்து கேடிஎம் சுங்கைபூலோ ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த அந்த மின்சார ரயிலில் 30 பயணிகள் இருந்தனர்.

ஏதோ ஒன்று மோதியதை ரயில் ஓட்டுநர் உணர்ந்ததை தொடர்ந்து உடனடியாக அவர் ரயிலை நிறுத்தினார். பிறகு ரயில் தண்டவாள ஓரத்தில் இருவர் ரயில் மோதி மாண்டதைக் கண்டு அந்த ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட அந்த ரயிலில் பயணிகள் மற்றொரு மின்சார ரயிலில் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.