செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது! இந்தியர்களின் தலையெழுத்து?
அரசியல்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது! இந்தியர்களின் தலையெழுத்து?

ஆட்சி மாறினால் மலேசிய இந்தியர்களின் வாழ்வாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிய இச்சமுதாயத்திற்கு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. உயர் கல்வி கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த நிலையில் 2013ஆம் ஆண்டு பிரச்சனைக்கு தீர்வு காண முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் முன்வந்தார்.

தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அவர் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இந்திய மாணவர்களுக்காக 1,500 இடங்கள் பிரத்தியேகமாக ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு மலேசிய இந்திய மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியது.

ஆண்டுதோறும் 500க்கும் குறைவான இந்தியர்கள் மாணவர்கள் மட்டுமே மெட்ரிகுலேஷன் கல்லூரியில் படித்து வந்தனர். இந்த எண்ணிக்கை 1500 ஆக உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 1,500 இடங்களில் 1300 இடங்கள் நிரப்பப்பட்டன.

இச்சூழ்நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தேசிய முன்னணி அரசாங்கம் பிரதமர் நஜிப் தவறிவிட்டார்கள் என எதிர்க் கட்சியின் இந்திய தலைவர்கள் குரல் எழுப்பினார்கள்.( இப்போது இவர்கள் தான் ஆளும் கட்சி)

மெட்ரிகுலேஷன் குறித்த விழிப்புணர்வை இந்திய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2015 தொடக்கம் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இணையும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1500 வரை எட்டியது. அதன் பின்னர் அதிகமான மாணவர்கள் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்வதால் எண்ணிக்கை 1500 கடந்தது.

2013ஆம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் டத்தோஶ்ரீ நஜிப்

இதை அறிந்து 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மெட்ரிகுலேஷன் கல்லூரியில் மேலும் 700 இடங்கள் கூடுதலாக இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்படும் என நஜிப் கூறினார். ஆகமொத்தம் இவ்வாண்டு மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இணைய போகும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை 2200 ஆக இருக்க வேண்டும்.

ஆனால் 10A பெற்ற மாணவர்களுக்கு கூட மெட்ரிகுலேஷன் கல்லூரியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இச்சமுதாயத்தின் தலையில் இடியை இறக்கி உள்ளது. மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்பதைப்போல பழைய நிலைமைக்கே நாம் திரும்பி விட்டோம். இப்போது மெட்ரிகுலேஷன் கல்லூரியில் மறுக்கப்பட்ட வாய்ப்பை யார் மூலம் மீண்டும் பெற முடியும் என்பது குறித்து கூட சிந்திக்க முடியாமல் இச்சமுதாயம் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றது.

அந்தந்தத் துறைகளின் பிரச்சனைகளை அந்தந்தத் துறைகளின் அமைச்சர்கள் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்பதில் பிரதமர் மகாதீர் உறுதியாக இருக்கின்றார். இப்போது இந்த விவகாரத்தை கல்வியமைச்சர் தீர்க்க போகிறாரா? அல்லது இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 4 அமைச்சர்கள் உட்பட ஒரு துணை அமைச்சர் தீர்வு காண்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மெட்ரிகுலேஷன் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்காத இந்திய மாணவர்கள் மித்ராவை தொடர்பு கொள்ளுமாறு கூறப்படுகின்றது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மே இறுதியில் அல்லது ஜூன் மாத பதிவின் போது தான் ஏற்றுக் கொள்ளப்படும். அதற்கு முன்னதாக இரண்டு மாதங்கள் போதிக்கப்பட்ட பாடத் திட்டங்கள் அனைத்தையும் இவர்கள் சேர்த்து கற்க வேண்டும். இது மாணவர்களுக்கு எவ்வளவு பெரிய சுமையை ஏற்படுத்தும் என்று இந்த விவகாரம் குறித்து ஆரம்பத்தில் குரலெழுப்பிய இப்போதைய தலைவர்களுக்கு தெரியவில்லையா? என்ற கேள்வியை இந்திய சமுதாயத்தினர் முன்வைக்கின்றார்கள்.

யார் இதற்கு தீர்வு காண போகின்றார்? இவ்வாண்டுக்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்பில் எத்தனை இடங்கள் இந்திய சமுதாய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன? எத்தனை மாணவர்கள் தங்களுக்கான இடத்தை ஏற்றுக்கொண்டார்கள்? கடந்த அரசு வழங்கிய 1,500 மெட்ரிகுலேஷன் இடங்கள் நிரப்பப்பட்தா? கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வழங்கிய கூடுதலான இட ஒதுக்கீட்டின் நிலை என்ன?

இத்தனை கேள்விகளையும் நெஞ்சில் சுமந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது இந்திய சமுதாயம். இந்தியர்களின் பிரச்சனைக்கு நேரடியாக தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் துறையின் கீழ் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப் பிரிவு டத்தோஸ்ரீ நஜிப் தலைமையில் தொடங்கப்பட்டது.

நேரடியாக இந்தியர்களும் பிரச்சினையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமலாக்கப்பிரிவு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது. இப்போது இந்திய சமுதாயத்தின் பிரச்சினையை யார் தீர்ப்பது? ஆட்சி மாறியது என்ற மகிழ்ச்சியில் இருந்தோம் ஆனால் இப்போது நமது பிரச்சனைக்கு யார் தீர்வு காண்பார் என்ற மிகப்பெரிய கேள்விக்கு விடை தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன