அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > நஜிப் வழக்கு விசாரணை: எம்.ஏ.சி.சி.யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நஜிப் வழக்கு விசாரணை: எம்.ஏ.சி.சி.யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

கோலாலம்பூர் ஏப். 17-

இசான் பெர்டானா சென் பெர்ஹாட்டின் வங்கிக் கணக்கு தொடர்பான அசல் ஆவணங்கள் எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பேங்க் நெகாரா மலேசியாவின் அதிகாரி ஒருவர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்தார்.

1எம்டிபி விவகாரத்தில் தொடர்புப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் இசாம் பெர்டானாவும் ஒன்றாகும். 2015ஆம் ஆண்டு முதல் தான் பணியாற்றி வரும் நிதி உளவு மற்றும் அமலாக்கத் துறை யில் அந்த ஆவணங்களை பாதுகாப்பில் வைத்திருந்ததாக முகமட் நிஷாம் என்ற பேங்க் நெகாராவின்அதிகாரி கூறினார்.

1எம்டிபி துணை நிறுவனமான எஸ் .ஆர். சி .இன்டர்நேஷனலில் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி முறைகேடு சம்பந்தப்பட்ட டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணையில் மூன்றாவது சாட்சியான முகமட் நிஷாம் அரசு தரப்பு வழக்கறிஞர் டி.பி.பி டத்தோ சுலைமான் இப்ராகிம் எழுப்பியகேள்விக்கு பதிலளித்தபோது இதனை தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி தமது துறையின் தலைவரிடமிருந்து உத்தரவை பெற்றதாக 39 வயதுடைய முகமட் நிஷாம் தெரிவித்தார்.

2001ஆம் ஆண்டின் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் 37 (1) விதியின் கீழ் இசான் பெர்டானாவுக்கு சொந்தமான கணக்குத் தொடர்பான வங்கி ஆவணங்களை ஒப்படைக்கும்படி அறிக்கை ஒன்றில் தமக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

1எம்டிபியின் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு இசான் பெர்டானா பொறுப்பு வகிக்கும் நிறுவனமாகும். ஜாலான்
ராஜா சூழனில் உள்ள அப்ஃபின் பேங்க் தலைமையகத்திற்கு சென்று நிமா ஷபிரா காலிட் என்ற வங்கி அதிகாரியிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்ததாக முகமட் நிஷாம் கூறினார்.

சிறப்பு பணிக்குழுவின் பிரதிநிதிகள் மூல ஆவணங்களின் நகலை எடுத்துக் கொண்ட பின்னர் அந்த ஆவணங்களை மீண்டும் 2018 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதியன்று எம்.ஏ.சி.சி.யிடம் ஒப்படைத்ததாகவும் அவர் சொன்னார். எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளி நிதி தொடர்பான 7 குற்றச்சாட்டுக்களையும் நஜீப் எதிர்நோக்கியுள்ளார்.

1எம்டிபி தொடர்பான மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுக்களை மறுத்து கடந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி அவர் விசாரணை கோரினார். எஸ் ஆர் சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை அவர் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.

இதே 4 கோடியே 20 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட சட்டவிரோத பண மோசடி தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்கள் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக நீதிமன்றம் வந்தபோது நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டது நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஷாலி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை ஏப்ரரல் 17 ஆம் தேதி புதன்கிழமை தொடரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன