அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வார்த்தை தவறியது ஏன்? பக்காத்தானிடம் கெராக்கான் கேள்வி
அரசியல்பொதுத் தேர்தல் 14

வார்த்தை தவறியது ஏன்? பக்காத்தானிடம் கெராக்கான் கேள்வி

கோலாலம்பூர், ஏப்ரல். 17-

 அரசாங்கத்தின் கொள்கை மக்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்பதை கெராக்கான் ஏற்றுக் கொள்கிறது. எனினும், பக்காத்தான் ஹராப்பான் தனது வார்த்தையில் தடம் புரள்வது   ஏன் என்று அக்கட்சி வினவியுள்ளது.

 மலேசியாவிற்கு சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்கு அரசாங்கத்தின் மறுமலர்ச்சி திட்டங்கள் இன்றியமையாதவை என்று அண்மையில் வாஷிங்டனில் மலேசியர்களுடனான சந்திப்பின் போது நிதியமைச்சர் லிம் குவான் எங் பேசியதை கெராக்கான் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் மேற்கோள் காட்டினார்.

 அரசாங்கத்தின் கொள்கை மக்களுக்கு நன்மையைக் கொண்டு வர வேண்டும் என்பதில் கெராக்கானுக்கு எவ்வித மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், பக்காத்தான் ஹராப்பான் தனது வார்த்தைகளில் தடம் புரண்டுவிட்டது. உதாரணத்திற்கு அண்மைய வரி கொள்கை மக்களை பெரும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அறிக்கை ஒன்றின் வழி டோமினிக் லாவ் குறிப்பிட்டார்.

பக்காத்தான் ஆட்சி மாற்றம் கண்ட பின்னர்  மக்களிடையே மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வோருக்கான வரி, சோடா வரி மற்றும் இலக்கவியல் வரி உட்பட இன்னும் பல. இவைதான் மக்களுக்குப் பயனளிக்கும் லிம் குவாங் எங்கின்கொள்கையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

   “உண்மையில் எஸ்எஸ்டியைக் காட்டிலும் ஜிஎஸ்டியே சிறந்தது. சீன வர்த்தகர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜிஎஸ்டியைப் பாராட்டியிருப்பதை மலேசிய சீன வர்த்தக சம்மேளனத்தின் ஆய்வு காட்டியுள்ளது. எஸ்எஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்ததோடு இவற்றிற்கு இன்னும் தீர்வு காணப்படாமலும் உள்ளன”.

ஆகையால், ஜிஎஸ்டி ஒரு சிறந்த கொள்கையாகும். இது வெளிப்படையானது என்பதோடு இதனை வர்த்தகர்கள் திரும்பவும் பெறலாம். அரசாங்கம் எஸ்எஸ்டியை ரத்து செய்துவிட்டு ஆக்கப்பூர்வ பலனைத் தரும் ஜிஎஸ்டியை மீண்டும் அமல்படுத்தத் தயங்குவது ஏன் என்று டோமினிக் லாவ் வினவினார்.

“மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில் பக்காத்தான் அரசாங்கம் முந்தைய ஜிஎஸ்டி வரியை 6 விழுக்காட்டில் இருந்து 3 விழுக்காடாகக் குறைக்கலாம்” என்றார் அவர்.

பக்காத்தான் அரசாங்கம் மக்கள் மீது பல்வேறு வரிகளை விதித்து வருகிறது. மக்கள் குறிப்பாக பி40 பிரிவினர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்திடம் இவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

இதன் பொருட்டு அரசாங்கம் தேவையற்ற வரிகளை மறுஆய்வு செய்வதோடு வாழ்க்கைச் செலவின அழுத்தத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் டோமினிக் லாவ் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன