ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மின்னல் பண்பலைக்கு ஒரு நேயரின் வேண்டுகோள்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

மின்னல் பண்பலைக்கு ஒரு நேயரின் வேண்டுகோள்!

(இரா.சண்முகநாதன் நடேசன்)

உலகளாவிய நிலையில், ஒரு நொடிவிடாது இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாது தமிழ் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மின்னல் பண்பலை வானொலி நிலையத்தின் அறிவிப்புப் பணியாளர்களுக்கு என் முதற்கண் வணக்கமும் வாழ்த்தும்.

மலேசிய வானொலியின் வாயிலாக தமிழ்ச்சேவை ஆற்றிவரும் நீங்கள் திறமைமிக்கவர் என்றால் தவறில்லை. சிறந்த முறையில் பணி செய்து மலேசியாவின் முதல்நிலை தமிழ் வானொலி எனும் நிலையை அடையவும் தக்க வைத்துக் கொள்ளவும் நீங்கள் நடத்தும் செயல்பாடுகள் சொல்லிடங்கா.

வானொலி நேயர்களின் மனத்தில் நீங்காத இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்கின்ற” வீட்டுப்பாடங்கள்” கொஞ்ச நஞ்சமல்ல. நல்ல சிறந்த முன்னேற்பாடுகளோடும் சிறந்த திட்டமிடலோடும்தான் ஒலிபரப்பு அறையினுள் நுழைகின்றீர் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்காது.

உங்களின் முக்கியப்பணி 3.

  1. அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் மக்களுக்குப் பகிர்வதும் தெளிவுபடுத்துவதும் ஆகும் .அப்பணியை நிறைவாகச் செய்து வருகின்றீர்.நன்றி.
  2. வர்த்தக நிறுவனங்களின் பொருட்களை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்துவது ஆகும். அப்பொருட்களை மக்களின் செவிகளில் தேனைப் பாய்ச்சுவது போல் நல்ல மொழிநடையில் பகிர்ந்து, நேயர்களை கவர்ந்து வர்த்த நிறுவனங்களையும் உங்கள் தமிழ் ஆற்றலால் வாழ வைக்கின்றீர்கள்.
    வாழ்த்துகள்
  3. இசையின் வழி பொழுது போக்கை சேவையை மக்களுக்கு வழங்கி நேயர்களை மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்கச் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். இங்கும் உங்களின. தமிழின் ஆளுமை தலைநிமிர்ந்து நிற்கின்றது.
    மகிழ்ச்சி.

இவ்வாறு எல்லா நோக்கங்களையும் நிறைவேற்ற தமிழ் மொழியை பயன்படுத்தும் நீங்கள் , மின்னல் பண்பலை வழி நேயர்கள் தமிழை அறிய என்ன செய்தீர்கள். வாரம் ஒருமுறை பெரும்பாலோர் ‘காலைச் சந்தையில்’ கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஒலிபரப்படும் ” அமுதே தமிழே” நிகழ்ச்சி ஒன்று போதுமா? வேறு நிகழ்ச்சியை படைக்க க் கூடாதா?

வார நாட்களில் காலையில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சியில் நேயர்களோடு கைப்பேசியில் தொடர்பு கொள்கின்றீர்கள்.மின்னல் பண்பலையின் சமூக ஊடங்களைப் பார்த்தீரா என்று கேட்கிறீர்கள்.பிறகு கேள்வி கேட்டு அவர்களை சவாலுக்கு அழைக்கின்றீர்கள்.இருபது வினாடிக்கு “இன்ஸடகிராமை” இமை மூடாமல் பாருங்கள்.பின் கேள்விக்கு விடை கூறுங்கள் என்று கட்டளை இடுகின்றீர்.

அடுத்து கேட்கப்படும் கேள்வி :

ஹர்ரி போர்ட்டர் என்ற நூலை எழுதியவர் யார்? மகிழ்ச்சி.

இவ்வாறான வினாக்களை எழுப்பி தமிழ் நேயர்களுக்கு தமிழ் வழி உலக இலக்கிய அறிவை வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றீர். சுருங்கக் கூறின் உங்கள் படைப்பாற்றல் இளமை,புதுமை இனிமையாக உள்ளது. நன்றி

நண்பர்களே, தமிழ் மொழியிலும் நிறைய நூல்கள் உள்ளன.அந்நூல்கள் தொடர்பான தகவல்களை உங்கள் வானொலியின் சமுக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யலாம்.நேயர்களை காணச் சொல்லலாம், அதன்பின் தொடர்பு கொள்ளும் நேயர்களின் கருத்தைக் கேட்கலாம் விளக்கமும் சொல்லலாம். இதன்வழி நமது நேயர்களுக்கு துளியளவாவது தமிழ் மொழியெப் பற்றிய தகவல் வழங்க வாய்ப்பு உள்ளதே!

உண்மை தானே ? எப்பொழுது செய்வீர்கள்? இவ்வாறான செயல்பாடுகளைக் காணத போதும் இந்நாட்டில் தமிழ் மொழியின் நிலையை எண்ணும் போது, ஓரே மர்மம், திகில் , பரபரப்பாக உள்ளது. கருத்தில் கொள்க .கவனத்தில் கொள்க.

நண்பர்களே, இன்று நீங்கள் நாட்டின் நட்சத்திரங்கள்.சமூகத்தின் மத்தியில் உங்களுக்கு வழங்கப்படும் வரவேற்பும் மரியாதையும் யாரால் வந்தது? தமிழால் என்பதை மறந்து விடக்கூடாது. உங்களது ” ஒரு துளி வியர்வைக்கு, ஒருபவுன் தங்கக் காசு கொடுத்தது…தமிழே” மறக்க வேண்டாம்.உங்களை வாழ வைக்கும் தமிழை தழைக்கச் செய்யுங்கள். அதுதான் தமிழுக்கு நீங்கள் செய்யும் நன்றி.

குறிப்பு : இப்பதிவை வாசிப்போர் விரும்பாவிடினும் தாழ்வில்லை ! தயவு செய்து பகிரவும்.உங்களால் இப்பதிவு மின்னல் பண்பலையின் செவிகளுக்கு எட்ட வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன