தமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்!!

0
5

பினாங்கு-17 ஏப்ரல்

தாய்மொழியான தமிழ்மொழி மீதான பற்றுதலை இளைய தலைமுறையினரிடையே அதிகரிக்கச் செய்வதில் பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேந்த இந்திய பண்பாட்டு கழகத்தின் முயற்சி மாணவர்களிடையே  பெரும் பங்களிப்பை அளித்திருக்கின்றது.

தமிழ் துறையே இல்லாத இந்தப் பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர்கள் ஏற்று நடத்திய ”கவிபாடும் தென்றல் 2019” என்ற நிகழ்ச்சியின் மூலம் அங்குத் தாய்மொழி தொடர்ந்து பாதுகாக்கப்படுவது பெருமைக்குரியதாகும்.

ஏற்பாட்டுக்குழுவினர் (மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய மாணவர்கள்)

தேசிய அளவில் ஏழாவது முறையாக, இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவிபாடும் தென்றல் நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, சிறுகதை எழுதும் போட்டி,  புதிர்ப்போட்டி  மற்றும் சொற்போர் என்று பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. நாடளவில் இருந்து ஆரம்ப, இடைநிலை பள்ளிகள், பொது மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர் பயிற்சி கூடங்களின் பயிற்சி ஆசிரியர்களும் வருகை தந்து  பங்கேற்றனர்.

கடந்த 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயர்கல்வி கூடங்களுக்கான போட்டிகளில், 300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்ட வேளையில், மறுநாள் சனிக்கிழமை ஆரம்ப, இடைநிலை பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொண்டது ஏற்பாட்டுக் குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் விரோனிக்கா எம். தோமஸ் கூறினார்.

 

வினிதா ஸ்ரீ சைகன் (நடுவில்) கவிதை போட்டியின் வெற்றியாளர்கள்

 

சொற்போர் வெற்றியாளர்கள் (திரங்கானு பல்கலைக்கழக மாணவர்கள்)

 

சுப்ரமணிய பாரதியை முதன்மையாகக் கொண்ட இப்போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கவிதை படைப்பதிலும் பேச்சுபோட்டிகளிலும் மிகவும் ஆர்வமாய்ப் பங்கேற்று இருந்தனர். இதுபோன்ற போட்டிகளும் ஏற்பாடு செய்வதன் மூலம் மாணவர்களிடம் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதுடன் மொழியின் மீதான ஆர்வத்தை அவர்களிடத்தில் இன்னும் ஆழமாய் விதைக்க முடியும் செயற்குழுவினர் தெரிவித்தனர்.

கவிதை போட்டியில், மலேசியா கிளாந்தான் பல்கலைகழகத்தைச் சேர்ந்த வினிதா ஸ்ரீ சைகன் முதல் இடத்தைப் பிடித்து வெற்றித் தொகை ஆயிரம் ரிங்கிட்டையும் கோப்பையும் வென்றிருந்த வேளையில், சொற்போர் போட்டியில், மலேசிய திரங்கானு பல்கலைக்கழக மாணவர்கள் முதல் இடத்தை வென்றனர். தமிழ்ப்பள்ளிகளுக்கான சுழற்கிண்ணத்தைச் செயிண்ட் மெரி பள்ளி வென்ற வேளையில்,  இடைநிலை பள்ளிகளுக்கான கிண்ணத்தைப் புக்கிட் மெர்த்தாஜாம் உயர்பள்ளி தட்டிச் சென்றிருக்கிறது.

 

2012-ஆம் ஆண்டிலிருந்து மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளும் போட்டிகளும் அங்குத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது மிகவும் வரவேற்ககூடியது என்று கவிபாடும் தென்றல் 2019 போட்டிகளின் தலைமை நீதிபதியான டாக்டர் மனோன்மணி அண்ணாமலை கூறினார்.

 

 

தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஊடக செய்தியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் போன்றவர்கள்  இப்போட்டிகளின் நடுவர்களாக பணியாற்றி  பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சிக்குத் துணையாக நின்றனர்.

தாய்மொழியை வாழ்விக்கும் மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தின் தமிழ் நெஞ்சங்களான சகோதர சகோதரிகளுக்கு அநேகன் இணைய செய்தி தளத்தின் அன்பு வாழ்த்து! வளர்க செம்மொழி!!