10 கிலோ மீட்டர் பொது நீச்சல் போட்டியில் மலேசியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள்

0
13

புத்ராஜெயா, ஆக.18 –

29 ஆவது சீ விளையாட்டுப் போட்டியின் பொது நீச்சல் போட்டியில் மலேசியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் பிரிவில் கேவின் யாப் தங்கம் வென்ற வேளையில் மகளிர்க்கான பிரிவில் ஹெய்டி கான் மலேசியாவுக்கான தங்கப் பதக்கத்தை உறுதிச் செய்தார்.

புத்ராஜெயாவில் உள்ள நீர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் கேவின் யாப் 2 மணி 3 நிமிடங்களில் போட்டியை முடித்து தங்கம் வென்றார். அதேவேளையில் தாய்லாந்தின் பீராபாட் லெர்ட்சதாபோர்ன்சூக் வெள்ளிப் பதக்கத்தையும் இந்தோனேசியாவின் அப்லா பட்லான் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதர நாடுகளின் போட்டியாளர்களைக் காட்டிலும் தொடர்ந்து சீராக முன்னணியில் நீந்த வேண்டும் என்ற தனது வியூகம் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளதாக கேவின் யாப் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில், 400, 1500 மீட்டர் பிரிஸ்டைல் பிரிவில் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வுப் பெறுவதில் தோல்வி கண்டதை அடுத்து கேவின் யாப் 10 கிலோ மீட்டர் பொது நீச்சல் போட்டிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார் என்பது குறிப்பிடதக்கது.

மகளிர்க்கான பிரிவில் ஹெய்டி கான் 2 மணி 11 நிமிடங்களில் போட்டியை முடித்து தங்கம் வென்றார். சீ விளையாட்டுப் போட்டியில் ஹெய்டி கான் மூன்றாவது முறையாக பொது நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்.

2011 ஆம் ஆண்டில் 5 , 10 கிலோ மீட்டர் பொது நீச்சல் போட்டிகளில் ஹெய்டி கான் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

தாய்லாந்தின் பென்ஜாபோர்ன் சிரிபானோம்தோர்ன் வெள்ளிப் பதக்கம் வென்ற வேளையில் சிங்கப்பூரின் சந்தால் லியூ வெண்கலம் வென்றார்.