வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மெட்ரிகுலேஷன் விவகாரம்: 4 இந்திய அமைச்சர்களும் தூங்குகிறார்களா? – டத்தோ எம் சம்பந்தன்
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

மெட்ரிகுலேஷன் விவகாரம்: 4 இந்திய அமைச்சர்களும் தூங்குகிறார்களா? – டத்தோ எம் சம்பந்தன்

கோலாலம்பூர் ஏப்ரல் 18-

இவ்வாண்டுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டில் இந்திய மாணவர்களுக்கு போதுமான இடங்கள் வழங்கப்படாதது குறித்து ஏன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய அமைச்சர்கள் கேள்வி எழுப்பவில்லை என ஐபிஎப் கட்சியின் தலைவர் செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய சமுதாய மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பாமல் அந்த நான்கு பேரும் உறக்கத்தில் உள்ளார்களா? என அவர் வன்மையாகச் சாடினார்.

உயர் கல்வி கூடங்களில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மனநிறைவு இல்லை என இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளும் கட்சியான தேசிய முன்னணியை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்கள். தேசிய முன்னணியில் அங்கத்துவம் பெற்றிருந்த உறுப்பு கட்சி தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் இந்த விவகாரத்தை முன்னாள் பிரதமர் நஜிப்பின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்றனர்.

இதனை நினைவில் நிலைநிறுத்திய பிரதமர் இந்திய சமுதாயத்திற்காக மெட்ரிகுலேஷன் கல்லூரியில் 1500 இடங்களை ஒதுக்குவதாக அறிவித்தார். கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மேலும் 700 இடங்கள் கூடுதலாக வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

ஆனால் தற்போது மெட்ரிகுலேஷன் கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர்களின் பட்டியல் வெளிவந்துள்ள நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கூட எட்டவில்லை என்பது மிகப்பெரிய வருத்தமான செய்தியாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் கேள்வி எழுப்பிய தீர்வுகாணவேண்டிய நான்கு அமைச்சர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?

ஆட்சி எங்கள் கையில் இருந்தால் இந்திய சமுதாயத்திற்கு எந்த பிரச்சனையும் வராது என கூறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய இந்திய அமைச்சர்களின் நிலை இப்பொழுது என்ன என்ற கேள்வியையும் சம்பந்தன் முன்வைத்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்திய சமுதாயம் எம்மாதிரியான பிரச்சினைகள் எதிர்கொள்ளும் என்று நாங்கள் முன்னமே தீர்மானித்து இருந்தோம். அவை அனைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அரசுத்துறைகளில் இந்தியர்களுக்கான பதவி உயர்வில் சிக்கல் ஏற்படும்! உயர் கல்வி கூடங்களில் நுழைய இந்திய மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்காது! தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமான குத்தகைகள் இந்தியர்களுக்கு வழங்கப்படாது? பல்கலைக்கழகங்களில் நுழையும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு? இப்படி பல சிக்கல்கள் எழும் என நாங்கள் நினைத்தோம் இப்பொழுது அது நடந்து விட்டது.

மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் தற்போது கல்வி அமைச்சின் தலைமையகத்தில் தங்களுக்கான மேல்முறையீட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறார்கள். இந்த விண்ணப்பத்தின் முடிவுகள் கிடைத்த பிறகு அவர்கள் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இணையும் பட்சத்தில் எப்படி முழுமையான அடைவு நிலையை முதல் தேர்வில் பதிவு செய்ய முடியும் என்ற கேள்வியையும் சம்பந்தன் முன்வைத்தார்.

கடந்த ஆட்சியில் இந்திய சமுதாயத்திற்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு அதனை நிறைவு செய்து வைத்திருந்தோம். இப்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு நம் சமுதாயம் திரும்பி கொண்டிருக்கின்றது. இந்நிலை தொடர்ந்தால் நமது சமுதாயம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். இதனைக் கருத்தில் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் நான்கு முழு அமைச்சர்களும் உடனடியாக ஒன்று கூடி இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு இந்திய சமுதாயத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என சம்பந்தன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன