அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மெட்ரிகுலேஷன் பூமிபுத்ரா மேம்பாட்டிற்கே!! கல்வி அமைச்சு அறிக்கை
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

மெட்ரிகுலேஷன் பூமிபுத்ரா மேம்பாட்டிற்கே!! கல்வி அமைச்சு அறிக்கை

புத்ராஜெயா, ஏப்ரல், 19-

மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்காக கடந்தாண்டு 2,200 இடங்களை முந்தைய அரசாங்கம் ஒதுக்கீடு செய்தது ஒரு முறை மட்டுமே என்றும் இது நடப்பு தேவை மற்றும் பூர்த்தி செய்யப்படாமல் இருந்த பூமிபுத்ரா மாணவர்களின் காலி இடங்கள் அடிப்படையில் அமைந்தது என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

அதேசமயம், 2018ஆம் ஆண்டில் 1,000  சீன மாணவர்களுக்காக பக்காத்தான் அரசாங்கம் இதே நடைமுறையையே பின்பற்றியது. இதுவும் ஒரு முறைதான். பூர்த்தி செய்யப்படாமல் இருந்த பூமிபுத்ரா மாணவர்களின் காலி இடங்களில் இவர்கள் நிரப்பப்பட்டனர் என்று அமைச்சு குறிப்பிட்டது.

மலேசிய கல்வி அமைச்சின் மெட்ரிகுலேஷன் திட்டம் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய தரமான கல்வி வாயிலாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவ துறைகளில் பூமிபுத்ரா மாணவர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டதாகும். சிறந்த மனித மூலதனத்தை உருவாக்குவது இதன் தலையாய நோக்கமாகும்.

இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வாண்டும் 90 விழுக்காடு பூமிபுத்ரா மாணவர்கள் மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் 10 விழுக்காடு பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் என்று நிலைநிறுத்தப்பட்டது. விண்ணப்பம் செய்த துறைகளுக்கு ஏற்ப 4 பாடங்களை வைத்து கல்வி தகுதி மதிப்பிடப்படுகிறது.

இந்த 4 பாடங்களும் இத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் அறிவியல், கணக்கியல் மற்றும் பொறியியல் போன்ற மாறுப்பட்ட துறைகளை அடிப்படையாகக் கொண்டதாகும் என்று ஓர் அறிக்கை வழி கல்வியமைச்சு விவரித்தது.

ஒரு மாணவர் எஸ்.பி.எம் தேர்வில் 10 ஏக்கள் பெற்றிருப்பாரேயானால் குறிப்பிட்ட 4 பாடங்களைக் கொண்டே கல்வி தகுதி கணக்கிடப்படுகிறது. அதேவேளையில், இத்திட்டத்திற்கான மாணவர்கள் 90 விழுக்காடு கல்வி அடைவுநிலை மற்றும் 10 விழுக்காடு புறப்பாட நடவடிக்கை அடைவுநிலை ஆகியவற்றின் அடிப்படையிலேயே சேர்க்கப்படுகின்றனர் என்று அவ்வறிக்கை சுட்டிக் காட்டியது.

ஆயினும், குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினரை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப 2019ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் மாணவர் சேர்ப்பு திட்டத்தில் 60 விழுக்காட்டு இடங்களை பி40 பிரிவினருக்கும் எஞ்சிய 40 விழுக்காட்டு இடங்களை எம்40 எனும் நடுத்தர வருமானம் பெறுவோர் மற்றும் தி20 எனும் உயர் வருமானம் பெறுவோருக்கும்  அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் அதேவேளையில் பி40 பிரிவினர் மீது கூடுதல் கவனம் செலுத்தும் என்பதால் இந்தப் புதிய கொள்கை ஒரு நியாயமான அமலாக்கம் என்று கல்வியமைச்சு கூறியது. கல்வி அமைச்சு அறிவித்த 2019ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் மாணவர் சேர்ப்பு பட்டியல் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் அமைச்சு கருத்தில் கொள்கிறது.

எனவே, இவ்வாண்டு மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கு தேர்வு பெறாத மாணவர்கள், தங்கள் மேல்முறையீடுகளை மின்னஞ்சல், இணையம், அஞ்சல், தொலைநகல் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கும்படி அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

மேல்முறையீடு செய்வதற்கான இறுதி நாள் ஏப்ரல் 29 ஆகும். மேல்முறையீட்டின் முடிவுகளை மே 21ஆம் தேதி தொடங்கி கல்வி அமைச்சின் அகப்பக்கம் வாயிலாகவும் மெட்ரிகுலேஷன் பிரிவுடன் குறுந்தகவல் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று அவ்வறிக்கை கூறியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன