கோலாலம்பூர், ஏப்ரல் 20-

தற்போது இருந்து வரும் சுற்றுப்புற சூழலை தொடர்ந்து பேண வேண்டும் என்பதோடு மேம்பாடும் சுற்றுச்சூழலும் சீராக  இருக்க வேண்டியது அவசியமாகும். மேம்பாடும் சுற்றுப்புறமும் சீரற்ற நிலையில் இருந்தால் மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை மலேசியா பெற முடியாது என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

இயற்கையையும் சுற்றுச் சூழலையும் கூட்டாக பேணும் பொறுப்பும் கடப்பாட்டையும் மலேசியர்கள் கொண்டிருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நீண்டகால அல்லது நீடித்த நிலையில் சுற்றுச்சூழலை பேணும் கடப்பாடு இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

சீரற்ற மேம்பாடு மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை நாம் கண்கூடாக பார்த்துள்ளோம். லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நாம் செயல்பட முடியாது.

வானளாவிய நிலையிலான உயரமான கட்டிடங்களை நிர்மாணித்துவிட்டு ஆறுகளில் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தினாலும், அல்லது காடுகள் அழிக்கப்பட்டதாலும்  மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை மலேசியா பெற முடியாது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மலேசியா மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியைப் பெற வேண்டும் என நாம் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் சுற்றுப்புறங்களை பாதிக்கச் செய்து விட்டு இந்த தகுதியை  பெற முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதோடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டு நாம் ஆரோக்கியமான சூழ்நிலையில் வாழ முடியாது. இன்று கோலாலம்பூர் தாமான் துகு நினைவு பூங்காவில் பூமி தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய போது  டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில்  பிரதமரின் துணைவியார் டாக்டர் சித்தி ஆத்மா, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்  அஸ்மின் அலி, எரிபொருள் தொழில்நுட்பம், அறிவியல் பருவநிலை அமைச்சர் யோ பீ யின்,  கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சமாட்,   நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியார்  ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.