சிரம்பான், ஏப்ரல் 20-
உயர் கல்வி கூடங்களில் இந்திய மாணவர்களுக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தேசிய முன்னணி அரசாங்கம் வழங்கிய மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் வலியுறுத்தினார்.

உயர் கல்வி கூடங்களில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மனநிறைவு இல்லை என தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதற்கு தீர்வு காண முன்னாள் பிரதமர் நஜிப் முடிவு செய்தார். அமைச்சரவையில் இது குறித்து முடிவு செய்யப்பட்டது. அப்போது இந்திய மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்க மெட்ரிகுலேஷன் கல்லூரியில் 1500 கூடுதல் இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு அமைச்சரவை முழுமையான இணக்கம் தெரிவித்த நிலையில் 2012 தொடக்கம் கடந்த ஆண்டு வரை ஆயிரத்து 500 இடங்கள் இந்திய மாணவர்களுக்காக வழங்கப்பட்டன. கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மேலும் 700 இடங்களை வழங்குவதாக டத்தோ ஸ்ரீ நஜிப் உறுதியளித்தார்.

அந்த அடிப்படையில் இவ்வாண்டு மெட்ரிகுலேஷன் கல்லூரியில் 2200 இடங்கள் இந்திய மாணவர்களுக்காக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆயிரத்திற்கும் குறைவான இடங்கள் இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது அச் சமுதாயத்தின் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இந்த நடவடிக்கையானது மிக தவறு என தோன்றுகிறது.

பொது மலேசியா இனரீதியில் யாரும் பிறகு படக்கூடாது நாம் அனைவரும் மலேசியர்கள் அனைவருக்கும் சம உரிமை என்ற வாசகங்களை பேசிக் கொண்டு இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை கொடுக்காமல் இருப்பது மிக தவறான நடவடிக்கை என முகமட் ஹசான் சுட்டிக்காட்டினார்.

இந்த சிக்கலுக்கு கல்வி அமைச்சு உடனடியாக தீர்வு காண வேண்டும். எந்த ஒரு சமூகத்தை சார்ந்த வருக்கும் கல்வி உரிமையை பறிப்பது மிக தவறான நடவடிக்கையாகும். அதனால் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இந்திய மாணவர்களுக்கான வாய்ப்பை கல்வியமைச்சு உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.