புத்ரா ஜெயா, ஏப்.20-

மலேசிய மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய சில அம்சங்களை உட்படுத்தி  பண்டார் மலேசியா மேம்பாட்டுத் திட்டம் தொடரப்படும் என்ற பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அறிவிப்பை வீடமைப்பு ஊராட்சி துறை  வரவேற்றது.

விலைமதிப்புள்ள இப்பகுதியில் 10,000 வாங்கும் சக்திக்கேற்ற வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் முடிவு ஒரு சிறந்த தீர்வாகும் என்று அமைச்சர் ஜூரைடா கமாருடின் தெரிவித்தார்.

இதற்கு முன்பு பி40 பிரிவினருக்கும் மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக குடும்ப வருமானம் பெறும் கீழ்நிலை எம்40 பிரிவினருக்குமான வாங்கும் சக்திக்கேற்ற வீடுகள் புறநகர் மற்றும் நகரங்களின் உட்புறப் பகுதியிலும் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டு வந்தன. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் இத்தரப்பினருக்காக நகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் முடிவு அதன் கடப்பாட்டினைக் காட்டுவதாக அவர் சொன்னார்.

இந்த நடவடிக்கை மூலம் குறைந்த வருமானம் பெறுவோர் மேம்பாட்டுத் திட்டங்களில் இருந்து விடுபடாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இத்தரப்பினர் நகரங்களுக்கு வெகு தூரத்தில் குடியமர்த்தப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்பதும் அரசின் எண்ணமாகும் என்றும் ஜூரைடா கூறினார்.

அதேவேளையில், குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடமைப்புத் திட்டங்கள் நகரங்களில் மேற்கொள்ளப்படுவதற்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சி  அமைச்சிடம் பல திட்டங்கள் இருக்கின்றன. மேலும், அனைத்து வசதிகளும் அடங்கிய வீடுகளை இத்தரப்பினர் வாங்க அல்லது வாடகைக்கு அமர்த்த தேவையான கொள்கைகளும் வரையப்பட்டுள்ளன  என்றார் அவர்.

நடப்புச் சூழலைக் கருத்தில் இன்னும் பிள்ளைகளைக் கொண்டிராத தம்பதிகளுக்கான வீடுகள், தற்காலிக வீடுகளில் குடியிருப்போர் சொந்த வீடுகளைப் பெறுவதற்ககான  கடனுதவி , நாடு முழுமையும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்பு பகுதிகளில் தரமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற திட்டங்களை அமல்படுத்துவது குறித்து  வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை ஆராய்ந்து வருவதாக அமைச்சர் மேலும் சொன்னார்.

பண்டார் மலேசியா மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நகர்ப்புறங்களில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை நிர்மாணித்தல் போன்ற திட்டங்கள் நகர்ப்புறங்களில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் போக்குவரத்து செலவினத்தைக் குறைக்க உதவும் என்றார். ஒவ்வொரு மேம்பாட்டு திட்டம் குறிப்பாக குடியிருப்பு கட்டுமானம் என வரும்போது சமூக மேம்பாடு உள்பட முழுமையான அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேம்பாட்டு திட்டத்தில் எந்தவொரு தரப்பினரும் விடுபடாமல் இருப்பதை இது உறுதிப்படுத்தும் என்று அவர் சொன்னார்.

பி40 மற்றும் கீழ்நிலை எம் 40 தரப்பினரின் விருப்பத்தைக் கருத்தில் கொள்வதன் வாயிலாக மலேசியா நீடித்த மற்றும் முழுமையான வீடமைப்பு மேம்பாட்டைக் கொண்டிருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்