கோலாலம்பூர் ஏப். 20-
எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும் .இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சர் உடனடியாக தீர்வு காண்பதற்கு விவேகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குனர் பிரகாஷ்ராவ் வலியுறுத்தினார்.
எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உள்நாட்டு உயர்கல்வி நிலையங்களில் இணைவதற்கான ஒரே வாய்ப்பாக மற்றும் கனவாக மெட்ரிகுலேஷன் வாய்ப்பு இருந்தது. முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமூகத்தின் கோரிக்கையை ஏற்று மெட்ரிகுலேஷன் வாய்ப்பை படிப்படியாக அதிகரித்து 2500 பேர் வரை இந்த அந்தக் கல்வி திட்டத்தில் வாய்ப்பை வழங்கியது.
ஆனால் அந்த எண்ணிக்கையில் 50 விழுக்காட்டிற்கும் கூட நிறைவு செய்ய முடியாமல் வெறும் 700 பேருக்கு மட்டுமே மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் கூறியிருப்பது ஏற்புடையதாக இல்லை என பிரகாஷ் ராவ் தெரிவித்தார். அதுவும் கடந்த காலத்தில் விருப்பப்பட்ட சூழ்நிலை என்ற அடிப்படையில் தான் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இடங்கள் அதிகரிக்கப்பட்ட தாக அவர் கூறியிருப்பதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரகாஷ் ராவ் கூறினார்.
மக்களிடையே ஒற்றுமை நல்லிணக்கம் என்ற அடிப்படையில் இந்திய சமூகத்தில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு முன்வர வேண்டும். சிறந்த தேர்ச்சி பெற்ற பல பல இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த மாணவர்கள் பெரும் விரக்திக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.
அதோடு அந்த மாணவர்களின் பெற்றோர்களும் பெரும் வேதனையில் இருக்கின்றனர். சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்கள் உயர்கல்வி நிலையங்களில் இணைவதற்கான வாய்ப்பு இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். திறமையான மாணவர்கள் நமது நாட்டின் சொத்து என்பதை அரசாங்கம் எப்போதும் உணர வேண்டும்.
ஆண்டுதோறும் 27,000 முதல் 28,000 இந்திய மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வு எழுதுகின்றனர். இவர்களின் சிறந்த தேர்ச்சிபெற்ற சுமார் 6,000 மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்திற்கு மனு செய்கின்றனர்.
மஇகா தொடர்ச்சியாக எழுப்பிய கோரிக்கையை தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து டத்தோஸ்ரீ நஜீப் மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கு 1500 இடங்களை வழங்கி வந்தார். அதோடு இந்த இந்த எண்ணிக்கை மேலும் 700 ஆக அதிகரிக்கப்பட்டு மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கு 2,500 இடங்கள் வழங்கப்படும் என்றும் தேர்தலுக்கு முன் வாக்குறுதி வழங்கியிருந்தார். இந்த விவகாரத்தில் புதிய அரசாங்கத்தின் செயல்பாடு பெரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. புதிய அரசாங்கம் இன பாகுபாடின்றி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மக்கள் தேர்தலில் அவர்களுக்கு வெற்றியை வழங்கினர்.
ஆனால் அடிப்படை உரிமையாக இருக்கும் கல்வி விவகாரத்தில் குறிப்பாக மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடத்தை அல்லது எண்ணிக்கையை குறைத்திருப்பது இந்திய சமூகத்தில் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது என பிரகாஷ் ராவ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உருவெடுத்துள்ளது.
மேலும் பி 40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் மஸ்லி மாலேக் கூறியிருப்பதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பொதுச் சேவைத் துறையின் உபகாரச் சம்பள வாய்ப்பு செலவை காரணம் காட்டி அரசாங்கம் நிறுத்தியிருக்கும் இவ்வேளையில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்கு இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பாக இருந்த மெட்ரிகுலேசனுக்கான எண்ணிக்கையும் குறைத்திருப்பது பெற்றோர்களிடையே பெரும் சங்கடத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிறந்த தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதுவும் இந்திய மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 2200 இடங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு மறு பரிசீலிக்க வேண்டும் என பிரகாஷ் ராவ் கேட்டுக்கொண்டார்.

