அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஓட்டப்பந்தயத்தில் புதிய நம்பிக்கை: சாதனையை முறியடித்தார் பத்மலோஷினி ஜெயசீலன்! (காணொளி)
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஓட்டப்பந்தயத்தில் புதிய நம்பிக்கை: சாதனையை முறியடித்தார் பத்மலோஷினி ஜெயசீலன்! (காணொளி)

ஜொகூர் பாரு ஏப்ரல் 23-

எம்எஸ்எஸ்எம் எனப்படும் மலேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு மன்றத்தின் திடல்தட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜொகூர் மாநிலத்தை சேர்ந்த பத்மலோஷினி ஜெயசீலன் பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

கடந்த காலங்களில் திடல்தட போட்டி என்றால் மலேசியாவைப் பிரதிநிதித்து பல இந்தியர்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாக திடல்தட போட்டியில் ஆசிய மற்றும் உலகளாவிய நிலைகளிலும் மலேசிய இந்தியர்கள் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்கள்.

ஆனால் தற்போது திடல்தட போட்டிகளில் இடம் பெறும் இந்திய மாணவர்களின் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது என்பது சமுதாயத்திற்கு மிகப் பெரிய வருத்தமான செய்தி. இந்நிலையில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் சாதனை படைத்து நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார் இந்த பத்மலோஷி.

மலேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு மன்றம் 61 ஆவது முறையாக திடல்தட போட்டியை நடத்துகிறது. இதில் 800 மீட்டர் ஓட்டத்தில் பத்மலோஷினி பங்கேற்றார். 2 நிமிடம் 15.66 வினாடிகளில் இலக்கை கடந்து அவர் தங்கப்பதக்கத்தை வென்றார். முன்னதாக 2013 ஆம் ஆண்டு சர்விந்தர் கோர் 2 நிமிடம் 15.97 வினாடிகளில் இலக்கை கடந்ததே மலேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு மன்றம் நடத்திய போட்டியில் சாதனை நிமிடமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை பத்மலோஷினி முறியடித்திருக்கிறார்.

ஓட்டப்பந்தய துறையில் மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பத்மலோஷினி பல சாதனைகளைப் புரிய வேண்டும் என பலர் தங்களின் சமூக தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவ்வேளையில் பத்மலோஷினி ஆசிய ரீதியில் மட்டுமின்றி உலகளாவிய நிலைகளிலும் பல சாதனைகளைப் புரிந்து மலேசியர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென அநேகன் இணையதள பதிவேடு வாழ்த்துகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன