மே 12 மதமாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு!

கோலாலம்பூர், ஏப்ரல் 23-

மலேசிய சைவ சமயப் பேரவை ஏனைய இந்து சமய அமைப்புகளோடு இணைந்து மதமாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாட்டினை நடத்துகின்றது. இம் மாநாடு மே 12ஆம் தேதி காலை 8 மணி தொடங்கி ஒரு மணி வரை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் எதிரில் உள்ள சிலாங்கூர் சீன assembly மண்டபத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் பேரூர் ஆதீன குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சாந்தலிக மருதாசல அடிகளார் இம்மாநாட்டிற்கு சிறப்பு வருகை புரிய உள்ளார். அவரோடு பிரதமர் துறை அமைச்சர் பொன் வேத மூர்த்தியும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார் என சைவ சமயப் பேரவையின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் தெரிவித்தார்.

மலேசிய சைவ சமயப் பேரவையின் தலைவர் கருப்பொருள் உரையாற்றுவார். இதர இந்து சமய அமைப்புகளின் தலைவர்கள் மதமாற்றத்தால் இந்துக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை வழங்குவார்கள். மலேசிய சைவ சமயப் பேரவையுடன் இணைந்து இந்து சேவை சங்கம், சைவ சித்தாந்த மன்றம், கோல கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், நெகிரி செம்பிலான் சமூக நலன் கலை கலாச்சார நன்னெறி இயக்கம், சிலாங்கூர் இந்து அறவாரியம், ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமம் ஆகிய அமைப்புகளுடன் மேலும் பல இந்து சமய அமைப்புகளின் தொண்டர்கள் இம்மாநாட்டு ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு தனிமனிதன் மதம் மாறுவது உடன் மதமாற்றம் நின்றுவிடுவதில்லை. மதம் மாறிய அவரின் குடும்ப அமைதி சீர்குலைந்தது. மதம் மாற்றும் ஓர் எண்ணிக்கை பெருகும் போது அவர் சார்ந்த இனத்தின் கட்டமைப்பு வலிமை இழக்கிறது. இதனை இந்துக்களின் கடந்த கால சமூக வரலாறு தெளிவாக காட்டுகின்றது. ஆகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்கின்ற இந்துக்களும் இந்து சமய அமைப்புகளும் இந்து சமய பாதுகாக்கும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது கட்டாயம் ஆகிறது. இதனை நோக்கமாகக் கொண்டே இந்த மாநாடு நடத்தப்படுகின்றது என இவர் நாகப்பன் ஆறுமுகம் தெரிவித்தார்.

மதமாற்றத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் மலேசிய சைவ சமயப் பேரவை சைவ சமய வகுப்புகள், சித்தாந்த சிந்தனைக் களம், திருமுறைப் பெருவிழா,  உலகளாவிய சைவ சமய மாநாடு ஆகியவற்றை நடத்தி வருகின்றது. மதமாற்றத்தை நேரடியாகவே தடுக்கும் முயற்சியாக வீடு தேடி பேசுவோம் நிகழ்ச்சி வழி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\

இவை போன்ற பணிகளை இந்துக்களும் இந்து சமய அமைப்புகளும் முன்னெடுப்பதன் வழியாகவே மதமாற்றத்தை தடுத்து நிறுத்த முடியும். இதனை செய்வதற்கான வாய்ப்புகளையும் நீண்டகால செயல் திட்டங்களையும் ஆராய்ந்து முடிவு செய்யும் மாநாடாக இது அமையும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என அவர் தெரிவித்தார்.

மதமாற்றத்தால் ஏற்படும் குடும்ப நல சீர்கேடுகளையும் மதங்களுக்கிடையிலான நெருக்கடிகளையும் ஆராய்ந்து மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் சட்ட வரைவு களை அரசு மேற்கொள்ள வேண்டும். இது குறித்த விண்ணப்பம் பிரதமர் துறை அமைச்சரிடம் வழங்கப்படும்.

மத மாற்றத்திற்கு எதிரான தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் பொருட்டு மலேசிய இந்துக்கள் திரளாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் கேட்டுக்கொண்டார். குறிப்பாக இம்மாநாட்டில் காலை சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்கப்படும். முற்றிலும் இலவசமாக நடக்கும் இந்த மாநாட்டில் இந்துக்கள் தங்களின் சமயம் குறித்து அறிந்து கொள்வதற்கு திரளாக கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.