கோலாலம்பூர், ஏப்ரல் 23-

ஆறு சீன பத்திரிக்கைகளை கண்காணிப்பதற்கு ஆய்வு நிறுவனம் ஒன்றுக்கு மாதந்தோறும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் வழங்கியதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 6 முன்னணி சீனப் பத்திரிகைகளில் சீன சமூகத்தை பாதிக்கக்கூடிய விவகாரங்களை அடையாளம் காண்பதற்காக தமது ஆய்வு நிறுவனத்திற்கு இந்த தொகை கொடுக்கப்பட்டதாக சென்ஸ் எனப்படும் சென்டர் போர் ஸ்திரிஜிக் எங்கேஜ்மென்ட் நிறுவனத்தின் (Centre for Strategic Engagement )Sdn Bhd இயக்குனர் ரீத்தா சாய் ஹோன் தெரிவித்தார்.

டிசம்பர் 2014 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கிடையே வழங்கிய சேவைக்காக தமது நிறுவனத்திற்கு பங்சார் ஆர்.எச்.பி வங்கி கணக்கில் மூன்று லட்சம் வெள்ளி காசோலை போடப்பட்டதாக ரீத்தா சிம் சாய் ஹோன் கூறினார்.

முன்னாள் 1எம்டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ் ஆர். சி. இன்டர்நேஷனல் சென்ட்.பெர்ஹாட்டின் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி நிதி சம்பந்தப்பட்ட நம்பிக்கை மோசடி மற்றும் கள்ளப் பணம் பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் டத்தோஸ்ரீ நஜீப் வழக்கு விசாரணையில் அரசு தரப்பின் 14ஆவது சாட்சியாளராக ரீத்தா சிம் சாட்சியம் அளித்தார்.

2010 ஆம் ஆண்டில் சென்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது .சீன சமூகத்தை பாதிக்கக்கூடிய விவகாரங்கள் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கும்படி தமது நிறுவனத்திற்கு பணிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். காலஞ்சென்ற ரொம்பின் எம்பி இந்த ஆய்வு பணிக்காக தமது நிறுவனத்தை நியமித்ததாக ரீத்தா சிம் கூறினார். பொதுக்கொள்கை ஆய்வு மற்றும் சீன ஊடகங்கள் கண்காணிப்பு சேவைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சென்ஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சீனப் பத்திரிகைகள் தொடர்பான கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகள் தினசரி மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் அறிக்கை பிரதமர் அலுவலகத்தின் ஊடகப்பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ரீத்தா சிம் கூறினார். சின் சியூ, நன்யாங், குவாங் ஜிட் போ, சைனா பிரஸ், குவான் மிங் டெய்லி, ஓரியன்டல் டெய்லி ஆகியவையே இந்த ஆறு சீனப் பத்திரிகைகள் ஆகும்.

மாதந்தோறும் தமது நிறுவனம் இன்வாய்ஸ் விநியோகிக்கும் என்றும் வங்கி கணக்கின் மூலமாக மூன்று லட்சம் வெள்ளி பெற்றதாக ரீத்தா சிம் கூறினார் . இந்த காசோலை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த தமது தொலைபேசி எண், நிறுவனத்தின் வங்கிக் கணக்கை ஆகியவற்றையும் அவர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார். சீன பத்திரிகைகளை கண்காணித்து வந்த மற்றும் மொழிபெயர்ப்பு சேவையை வழங்கிய தமது ஊழியர்களுக்கும் இதர செலவுகளுக்கு இந்தத் தொகையை தான் வழங்கியதாகவும் ரீத்தா சிம் தெரிவித்தார்.