புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பொருத்தமில்லாத வேலைகளா?
அரசியல்பொதுத் தேர்தல் 14

பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பொருத்தமில்லாத வேலைகளா?

கோலாலம்பூர், ஏப்ரல். 23- 

அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு  10 லட்சம் தரமான வேலைகளைத் தயார்படுத்துவதற்காக அரசாங்கம் பணிப்படை ஒன்றை அமைக்கும் என்ற இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர்  சைட் சாடிக்கின் அறிவிப்புக்கு எதிராக கெராக்கான் கேள்விக் கனைகளைத் தொடுத்துள்ளது.

கெராக்கான் கட்சியின் பரிந்துரைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக  சைட் சாடிக்கை  இக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர்  டோமினிக் லாவ் ஹோ சாய் மேற்கோள் காட்டினார்.

“தேசிய வேலையில்லா விகிதத்தைக் காட்டிலும் பட்டப் படிப்பை முடித்த மாணவர்களிடையே வேலையில்லா விகிதம் அதிகமாகக் காணப்படுவதற்கு  அவர்களுக்குப் பொருத்தமில்லாத வேலை, தொழிற் பயிற்சி மற்றும் ஊதிய தேக்க நிலை  போன்றவையே காரணங்கள்  என்பதை கெராக்கான் பல காலமாகவே சுட்டிக் காட்டி வருகிறது” என்று அறிக்கை ஒன்றின்  வழி டோமினிக் லாவ் குறிப்பிட்டார்.

இளைஞர்களிடையே நிலவும் வேலையில்லா பிரச்னை மற்றும் ஊதிய தேக்க நிலையைக்  களைவதற்காக முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் காட்டிலும் இப்போது பணிப்படை மேற்கொள்ளவிருக்கும்  நடவடிக்கைகள் யாவை என்றும் அவர் வினவினார்.

“இதற்கு முன்பு இதே பிரச்னையைக் களைய  டேலண்ட் கோப் மற்றும் ஒரே மலேசியா பயிற்சி திட்டம் அமல்படுத்தப்பட்டது. பயிற்சி திட்டத்திற்கான ஒதுக்கீடு  50 லட்சம் வெள்ளியாகக் குறைக்கப்பட்டிருக்கும் வேளையில் பணிப்படையின் புதிய முயற்சியானது புதிய போத்தலில் நிரப்பப்பட்ட  பழைய மதுவிற்குச்  சமமா? என்றும்  அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டிலுள்ள உயர் கல்வி கழகங்கள் பாரம்பரிய தொழில் முறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக எதிர்காலத்திற்குப் பொருத்தமான 4.0 தொழிலியல் புரட்சி தொடர்பான பயிற்சிகளை மாணவர்களுக்கு  வழங்க வேண்டும் என்றார்.

அதே சமயம், மெட்ரிகுலேஷன் விவகாரம் பற்றியும்  டோமினிக் லாவ்  கருத்துரைத்தார். உயர் தரமான வேலைகளை உருவாக்குவதற்கு முன்பு உள்ளூர்வாசிகளின் திறனைத் தக்க வைப்பதே முக்கியம்.  ஆகையால், மெட்ரிகுலேஷன்  நுழைவுக்கு மாணவர்கள் தகுதி அடிப்படையில் சேர்க்கப்பட வேண்டுமே தவிர கோட்டா முறையில் அல்ல. நடப்பில் உள்ள கோட்டா முறையை அரசாங்கம் விரைவில் அகற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 “எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜசெக மெட்ரிகுலேஷன் திட்ட கோட்டா முறையை எப்போதும் சாடி வந்தது. ஆனால் ஆட்சியைக் கைப்பற்றி துணை கல்வி அமைச்சரை பதவியில் அமர்த்திய பின்னர் அமைதியாக இருப்பதென  முடிவு செய்துவிட்டது. கட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்குச் செய்யும் துரோகம் இது. இதற்காக தியோ நீ சிங் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ” என்றார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன