கோலாலம்பூர், ஏப்ரல் 24-

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் நம்பிக்கை கூட்டணி கட்சிக்குள் இடம்பெற்றுள்ள உறுப்பு கட்சிகளுக்குள் அணுக்கமான உறவு இல்லை என அத்தொகுதியின் ஃபிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவர் முகமட் ஷானி இஸ்மாயில் குற்றம்சாட்டியுள்ளார்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவடையும் தருணத்தில் இன்றளவும் இத்தொகுதியில் முதன்மையான மூன்று கட்சிகளை அழைத்து எந்த சந்திப்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

அதோடு இத்தொகுதியில் தமக்கு எதிராக தவறான கருத்துக்களும் நிலவுவதாகவும் அவர் கூறினார். வாட்ஸ் அப் போன்ற சமூக தளங்களில் இங்கு உள்ள வர்த்தகர்களை தாம் மிரட்டியதாக பலர் குற்றம் சாட்டி தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதால் இதுகுறித்து காவல்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தாம் புகார் செய்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

செவ்வாய்க்கிழமை மதியம் செராஸ் போலிஸ் தலைமையகத்தில் இது குறித்த புகாரை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் இப்பகுதியில் நடக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோமே தவிர முறையான எந்த சந்திப்போம் இதுவரையில் நடக்கவில்லை என அவர் கூறினார். இத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் துணை அமைச்சராக இருந்தபோதும் தங்களை அழைத்து பேச மறுப்பது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று யோசிக்காமல் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது என்றார் அவர். உங்களிடம் நான் தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அதனை காவல் நிலையத்திலும் வழங்க வேண்டும். அவர்கள் விசாரணை நடத்தி அதில் உண்மை உள்ளதா என்பதை எடுத்துரைப்பார்கள். அதை விட்டுவிட்டு சமூக தளங்களில் தவறான கருத்துக்களை வெளியிடும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

இப்பகுதியில் உள்ள மக்களும் தங்களுக்கு நேரும் பிரச்சினைகளை என்னிடம் தெரிவித்துள்ளார்கள். மக்களின் பிரச்சினையை கவனிப்பதுதான் நாடாளுமன்ற உறுப்பினரின் முதல் வேலை. கீழறுப்பு வேலையை நிறுத்திவிட்டு மக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தாம் முன்வைத்த புகாரை போலீஸ் சிறப்பாக விசாரித்து கூடிய விரைவில் பதில் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது என கூட்டரசு பிரதேச ஃபிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தகவல் பிரிவு தலைவருமான முகமட் ஷானி இஸ்மாயில் கூறினார்