செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தமிழில் பேசுவது தேசக் குற்றமா? அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்!
அரசியல்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தமிழில் பேசுவது தேசக் குற்றமா? அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்!

மக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி. வெறும் மலாய் அல்லது ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டும் அல்ல.

ஓட்டு கேட்கும்போது மட்டும் வாய் நிறைய தமிழன், இந்தியர் என்று பேசுவிட்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழ் வானொலி தொலைக்காட்சி செய்திகளுக்காக தமிழில் பேசுங்கள் என்று கேட்டால் செய்தியாளர்களை அவமதிக்கின்றீர்கள். இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. இதில் நான் நேரடியாக தொடர்புடையர் அல்ல. ஆனால் பல முறை செய்தியாளர்கள் பலரின் ஆதங்கத்தை கேட்டு இதனை எழுதுகின்றேன்.

இந்த அரசாங்கம் தொடங்கி எத்தனையோ விவகாரங்களில் இது போன்று நீங்கள் நடந்து கொண்டிருக்கின்றீர்கள். யார்? எவர் என்று? உங்களின் பெயரைக் இங்கு குறிப்பிட்டால் சமூக வலைத்தளங்களில் மக்கள் மொய்த்து வாரி எடுத்துவிடுவார்கள் என்பதை எச்சரிக்கையோடும் பணிவோடும் இங்கு பதிவு செய்கிறேன்.

ஆங்கிலத்தில் பேசுவிட்டு மீண்டும் தமிழில் அதனை சொல்வதற்கு அப்படி என்னய்யா பிரச்சனை உங்களுக்கு. உங்கள் செய்திகளை வெளியிட தமிழ் தொலைக்காட்சி, வானொலி செய்திகள், பத்திரிகைகள் வேண்டும், உங்கள் புகழ் பற்றி பேச வேண்டும். ஆனால் உங்களுக்காக வாக்களித்த தமிழ் மக்களுக்காக தமிழில் பேச மட்டும் கஷ்டம். நீங்கள் ஒரு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றீர்கள் பொதுவான ஒரு மொழியில் விளக்கம் தருவது நன்று.

அதன் பிறகு இந்திய சமுதாயத்திற்காக அந்த விளக்கத்தைச் செய்தியாளர்களிடம் கூறினால் அதனை தமிழ் ஊடகங்களில் ஒளி/ ஒலியேற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும் மக்களையும் சென்று சேரும். அது எங்களின் பணி. நாங்கள் உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் அல்ல நீங்கள் மறுத்து விரட்டி விடுவதற்கு.

ஒரு நடுநிலை செய்தியாளராக சொல்கிறேன், முந்தைய ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த இந்திய தலைவர்களும் இவ்வாறு நடந்துக்கொண்டதில்லை. மக்களால் வந்த உங்களை நாங்கள் மதிக்கின்றோம் ஆனால் மக்களிடம் உங்களைக் கொண்டு செல்லும் எங்களை பெரும்பாலன நேரங்களில் நீங்கள் மதிப்பதில்லை.

அது என்ன, கோபிந் சிங் தமிழிலா பேசுகின்றார்? நான் தமிழ் பேச வேண்டுமா என்ற நக்கல் உங்களுக்கு? அவருக்கு தாய்மொழி தமிழ் அல்லவே. மாண்புமிகு அமைச்சரே வேடிக்கை பாருங்கள் விதி உங்களை எப்படி தமிழில் பேச வைக்கிறது என்று.

பி.கு : ஒரு செய்தியாளராக தைரியமாக என் பெயரை இங்கு பதிவு செய்ய இயலும். ஆனால் என்ன செய்வது? அதிகாரம் எதுவரை பாயும் என்பது தெரியாது என்பதால் நலன் விரும்பிகளின் ஆலோசனைக்கு ஏற்ப பெயரின்றி முடிக்கின்றேன்…

ஒரு இந்திய அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழ் பேச மறுத்து அங்கிருந்த ஊடகவியலாளர்களை விரட்டும்  விதமாக பேசியது குறித்த அநேகன் வாசகரான ஒரு ஊடகவியலாளர் இந்த செய்தியை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இருந்தார்.

இந்த செய்தி கிடைத்த அடுத்த கணமே யார் அந்த இந்திய அமைச்சர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். தமிழ் பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் உங்களை அணுகும் போது என்னை எந்த பிரச்சனையில் மாட்டி விடுவதற்காக கேள்வி கேட்கிறீர்கள் என நீங்கள் கேட்டதும் எங்கள் காதுகளில் விழுந்தது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளும் கட்சிகள் குறித்து நீங்கள் செய்தியை வெளியிட வேண்டும் என்பதற்காக எங்களை தொடர்பு கொண்டீர்கள். என் செய்தியை வெளியிட மாட்டீர்களா என்று தொலைபேசி மூலமும் அழைத்து கேட்டதுண்டு. பல தமிழ் பத்திரிக்கைகள் உங்களது செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டார்கள்.

ஆனால் இன்று தமிழ் ஊடகத்திலிருந்து தள்ளி நிற்பதையே நீங்கள் அதிகமாக விரும்புகிறீர்கள். மேடைகளில் பேசும் பொழுது இந்தியன் தமிழன் எனக் கூறுவது முக்கியம் அல்ல உங்களது செய்திகள் தமிழ் மக்களையும் சென்றடைய வேண்டும் என நினைக்கும் ஊடகவியலாளர்களை மதிக்க வேண்டிய மாண்பும் மாண்புமிகு அமைச்சர் எடுக்க வேண்டும். அமைச்சர் என்பதையும் தாண்டி ஒரு இந்திய சமுதாயத்தின் பிரதிநிதி என இந்த சமுதாயம் உங்களை பார்க்கின்றது. அந்த நம்பிக்கையை சீர்குலைத்து விடாதீர்கள்.

One thought on “தமிழில் பேசுவது தேசக் குற்றமா? அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன