சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > எஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார்! – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

எஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார்! – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்

கோலாலம்பூர் ஏப்ரல் 25-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் ஆம்பேங்க்கில் தமக்கு சொந்தமான ஐந்து வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பதற்கு அனுமதிக்கும் அதிகாரியாக எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட் இயக்குனர் நிக் பைசால் அரிப் கமிலை நியமித்தார் என வங்கி அதிகாரியான ஆர். உமாதேவி தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு மார்ச் 10, 2013 ஆம் ஆண்டு ஜூன் 20, மற்றும் 2013ம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதிகளில் மூன்று வெவ்வேறு கடிதங்கள் மூலமாக இது தெரிவிக்கப்பட்டதாக ஜாலான் ராஜா சூழன் ஆம்பேங்க் கிளை நிர்வாகியான உமாதேவி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கியபோது இத்தகவலை வெளியிட்டார்.

தமது கணக்குகளை கையாள்வதற்கு நிக் பைசாலுக்கு அதிகாரம் வழங்கியிருப்பதாக நஜீப் எழுதியிருந்த அந்த மூன்று கடிதங்களிலும் குறிப்பிட்டிருந்தார் என உமாதேவி தெரிவித்தார்.

முன்னாள் 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ். ஆர் .சி இன்டர்நேஷனலின் 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்தது மற்றும் சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக நஜீப் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பின் 21வது சாட்சியாக உமாதேவி சாட்சியமளித்தார்.

948 மற்றும் 694 என்று கடைசியாக முடிவுறும் எண்களைக் கொண்ட இரண்டு வங்கிக் கணக்குகளின் நிலை மற்றும் வங்கியில் உள்ள பணம் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிக் பைசாலை நியமிப்பதை உறுதிப்படுத்தும் கடிதத்தை மார்ச் 10ஆம் தேதி ஜாலான் ராஜா சூழன் நிர்வாகிக்கு நஜீப் எழுதியிருந்தார் என அவர் கூறினார்.

இதனிடையே 2015 ஆம்ஆண்டு ஜூலை மாதம் மற்றும் 2015 பிப்ரவரி மாதத்தில் எஸ் ஆர் சி இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட்டில் 8 கோடியே 50 லட்சம் வெள்ளி வெளியே எடுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிக் பைசால் அரிப் கமில் மற்றும் இயக்குனர் டத்தோ சுபோ முகமட் யாசின் கையெழுத்திடப்பட்ட கடிதம் கிடைக்கப் பெற்ற பின்னர் இந்த நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதாக உமாதேவி உறுதிப்படுத்தினார்.

2014ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி 3 கோடியே 50 லட்சம் வெள்ளி பரிமாற்றம் செய்யப்பட்டது. மற்றொரு 50 லட்சம் வெள்ளி இரண்டு முறை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 2 மற்றும் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி எஸ் ஆர் .சி ஆம் பேங்க் கணக்கில் 2112022010650 இப்பணம் வெளியேறியது.

உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி முன்னிலையில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் உமாதேவி சாட்சியமளித்தார். 2014ம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி மூன்று கோடியே 50 லட்சம் வெள்ளியும், 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி 4 கோடி வெள்ளியும் பரிமாற்றம் செய்யப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கு விசாரணை தொடரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன