புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது! – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

புதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது! – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்

ஜொகூர் பாரு ஏப்ரல். 25-

அண்மையில் ஜோகூரில் அறிவிக்கப்பட்ட புதிய ஆட்சி குழு மாற்றத்தில் மனிதவளத்துறை இந்தியர்களிடமிருந்து கைவிட்டுப் போனது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக ஜோகூர் மாநில ம.இ.கா தலைவரும், கஹாங் சட்டமன்ற உறுப்பினருமான இரா. வித்யானந்தன் கூறியுள்ளார்.

இதற்கு முன் தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் ஜோகூர் ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை ம.இ.காவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த பொதுத் தேர்தலுக்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த புதிய நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் ஜ.செ.க.வின் டாக்டர் ராமகிருஷ்ணன் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட போது அவரிடம் மனித வளத்துறையும் கொடுக்கப்பட்டிருந்தது.

இப்போது அவரிடமிருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டு இந்தியர் அல்லாத ஆட்சிக்குழு உறுப்பினர் வசம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஜோகூர் இந்திய சமுகத்திற்கு பெரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இந்திய சமூகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு இதுவாகும் என வித்தியானந்தன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மனித வளத்துறை நம்மிடம் இருந்தால் அதிகமான செயல் திட்டங்களை இந்திய சமூகத்திற்கு குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கு செய்ய முடியும். மனிதவளத்துறை நம்மிடம் இருந்த காரணத்தினாலேயே இந்த அளவுக்கு இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் தொழில்துறை பயிற்சிகளையும் ஏற்பாடு செய்ய முடிந்தது .

அதே வேளையில் யூனிட் சுஹாடாயா என்ற ஒரு பிரிவையும் மனிதவளத் துறையின் கீழ் அமைத்து அதிகமான பல்வேறு திட்டங்களையும் மாநிலம் முழுவதும் செய்து வந்தோம். குறிப்பாக ஜே கே எம் மாவட்ட மன்றங்கள் உட்பட பல்வேறு அரசாங்கத் துறைகளில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்த முடிந்தது என்றும் அவர் சொன்னார்.

யூனிட் சுஹாடாயாவில் இரு இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதற்காண ஒதுக்கீட்டையும் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்தது .இந்த பிரிவின் மூலமும் மனிதவள அமைச்சின் வாயிலாகவும் அதிகமான தொழில் திறன் பயிற்சி திட்டங்களையும் வேலைவாய்ப்புகளையும் இந்த இளைஞர்களுக்காக ஏற்படுத்தி தர முடிந்தது.

மனிதவளத்துறை நம்மிடம் இருந்ததால்தான் இவ்வளவு திட்டங்களை இந்திய இளைஞர்களுக்காக அமல் படுத்த முடிந்தது. ஆனால் இப்போது மாநில ஆட்சி குழுவில் மனித வளத்துறை இந்தியர் அல்லாத மற்றொருவரிடம் ஒப்படைக்கப்பட்டது ஜொகூர் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் இந்தியர்களுக்கு வழங்கியிருக்கும் மற்றொரு ஏமாற்றமாகும் என வித்யானந்தன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன