கேமரன்மலை, ஆக. 19
தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், கேமரன் மலை தொகுதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடும் வரை இத்தொகுதி ம.இ.கா.விற்கே சொந்தமானது என கேமரன்மலை தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று கேமரன் மலை தேர்தல் கேந்திரன் அறிமுக விழாவில், ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரனை, ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் இத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதையும் அவர் கிளைத் தலைவர்கள் முன்னிலையில் அறிவித்தார்.

கேமரன்மலை தொகுதியில் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸூம் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார். அதோடு கணிசமான இந்திய வாக்காளர்கள் தாம் கொண்டிருப்பதாகவும் அவர் தொடர்ந்து கூறிவந்தார்.  ம.இ.கா.வின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல், 2015ஆம் ஆண்டு கட்சியின் உறுப்பினர் என்ற அடையாளத்தை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக இந்த நிமிடம் வரை தொடர்ந்து வருகிறார்.

அவர் ம.இ.கா.விலிருந்து விலகியதால் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி பொதுவான ஒன்று என பரவலாகப் பேசப்பட்டது. இத்தருணத்தில் கேவியஸ் அத்தொகுதியில் குறி வைத்து நடவடிக்கைகளில் இன்றளவும் ஈடுப்பட்டு வருகிறார். இத்தருணத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் இது ம.இ.கா.வின் தொகுதிதான் என்பதை டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பிரதமர் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாத வரையில் இந்த நாடாளுமன்ற தொகுதி ம.இ.கா.விற்கு சொந்தமானது என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் தேசிய முன்னணியில் அங்கத்துவம் பெற்ற உறுப்பு மற்றும் தோழமை கட்சிகளின் கேமரன்மலை கிளைத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.