அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்!  டத்தோ டோமினிக் லாவ்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்!  டத்தோ டோமினிக் லாவ்

கோலாலம்பூர், ஏப்ரல் .25-

மெட்ரிகுலேஷனுக்கான இடங்களை 25 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக அதிகரித்து பூமிபுத்ராக்களுக்கு 90 சதவிகிதம், பூமிபுத்ரா அல்லாதோருக்கு 10 சதிவிகிதம் என்ற கோட்டா முறையை நிலைநிறுத்திய கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக்கின் அறிவிப்பானது புதிய பாட்டிலில் நிரப்பப்பட்ட பழைய மது போன்ற நடவடிக்கையாகும் என்று கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் வர்ணித்தார்.

இந்த நடவடிக்கையானது சிறந்த தேர்ச்சியைப் பதிவு செய்த மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலம் தொடங்கி இன்று வரை கோட்டா முறையை கெராக்கான் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மெட்ரிகுலேஷனுக்கான மாணவர் சேர்ப்பு தகுதி அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது கெராக்கானின் நிலைப்பாடாகும் என்றார் அவர்.

இனரீதியில் வழங்கப்படும் இடங்களானது கல்வித் துறையை எந்தவகையிலும் மேம்படுத்தாது. மாறாக, அதிகமான திறமையானவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல இது வழி வகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஆகையால், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இந்த கோட்டா முறையை அகற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த காலங்களில் கோட்டா முறையை வன்மையாகக் கண்டித்ததோடு எல்லோரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்த வந்த ஜசெக இப்போது இந்த மெட்ரிகுலேஷன் கோட்டா விவகாரத்தை முழு மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளதா? ஜசெகவின் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும்எங்கே போனார்கள்? இன அடிப்படையிலான கொள்கைகளை இவர்கள் இப்போது ஏற்றுக் கொண்டார்களா என்று வினவினார் டோமினிக் லாவ்.

தங்களுக்கு ஆதரவு நல்கிய சீன வாக்காளர்களுக்கு இவர்கள் அவசியம் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மெட்ரிகுலேஷனுக்கான இடங்களை அதிகரித்ததன் மூலம் எஸ்.டி.பி.எம் மாணவர்களின் நிலை மேலும் இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. பொதுப் பல்கலைக்கழகங்கள் குறிப்பாக அதிகம் விரும்பப்படும் துறைகளுக்கு விண்ணப்பிக்கும் போது இந்த மாணவர்கள் மெட்ரிகுலேஷன் மாணவர்களிடமிருந்து கடும் போட்டியை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில், மெட்ரிகுலேஷன் இடங்களை அதிகரிக்கும் அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்கான இடங்களை அதிகரிக்கவில்லை. இந்த முடிவானது , எஸ்.டி.பி.எம் மாணவர்களிடையே கடும் போட்டியை உருவாக்குவதோடு அவர்களுக்கான வாய்ப்புகளையும் குறைக்கும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண ராக்கெட் பல்கலைக்கழகம் ஒன்றை ஜசெக தொடங்க வேண்டும். அதில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு நியாயமான ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என்று ஜசெகவிடம் தாம் பரிந்துரை செய்ய விரும்புவதாக டோமினிக் லாவ் கூறினார்.

“நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள போதிலும், ஜசெகவின் செயல்பாடானது பொதுத் தேர்தலுக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் மேலும் மோசமாக உள்ளது. இதன் வழி கல்வி துறையில் எந்தவித உருமாற்றத்தையும் செய்ய பக்காத்தான் அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. அதே வேளையில், ஜசெகவின் கபட வேடத்தையும் உரித்துக் காட்டியுள்ளது. நம்பிக்கை கூட்டணியில் ஓர் எதிர்க்கட்சி போலவே ஜசெக செயல்படுகிறது. அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அவர்களால் தவறான கொள்கைகளை எதிர்க்க முடியவில்லை. எனவே, பதவிகள் இருந்தும் அதிகாரம் இல்லாத கட்சியாக ஜசெக இருக்கிறது” என்றார் அவர்.

மலேசியர்கள் அனைவரும் சரிசமமாக நடத்தப்படும் வகையில் நடப்பில் உள்ள கோட்டா முறையை அரசாங்கம் அகற்ற வேண்டும். அதே வேளையில், அரசாங்கத்திற்குத் பொம்மையாக இல்லாமல், சிறந்த தேர்ச்சியைப் பெற்ற மாணவர்களின் நியாயமான உரிமைக்காக குரல் கொடுக்க ஜசெகவிற்கு துணிச்சல் வேண்டும் என்று டோமினிக் லாவ் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன