புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இலக்கியம் > தமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை
இலக்கியம்முதன்மைச் செய்திகள்

தமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை

பெட்டாலிங் ஜெயா ஏப்ரல் 28,

தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் இராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை நடந்து முடிந்தது.

ஒலிம்பியாட் கணிதம் “எளிய முறையில் கற்றல் கற்பித்தல்” எனும் கருப்பொருளில் நடைபெற்ற இப்பட்டறையின் இயக்குனரும் தமிழ் அறவாரியத்தின் செயலாளருமான சாமிநாத குமரன் அறிமுக உரையாற்றி பட்டறையைத் தொடக்கி வைத்தார். பொதுவாக ஏதேனும் ஒன்றை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முன் அதில் ஆசிரியர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இப்பயிற்சிப் பட்டறை அதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

 

தொடர்ந்து, சிறப்புரை ஆற்றிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரு.சி.ம.திரவியம், ஆசிரியர்கள் இப்பட்டறையில் கிடைக்கும் அறிவைப் பயன்படுத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஒலிம்பியாட் கணிதத் துறையிலும் சாதிக்கும் ஆற்றலை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

காலை மணி ஒன்பது தொடங்கி மாலை மணி ஆறு வரை நடைபெற்ற இப்பட்டறையில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ஒலிம்பியாட் கணிதம் தொடர்பான பல்வேறு வழிமுறைகளும் செயல்முறைகளும் திறன்பெற்ற பயிற்றுநர்களால் பயிற்றுவிக்கப்பட்டது.

 

குறிப்பாக, திரு.ஜோனதன் ராமச்சந்திரன்( மலேசிய ஒலிம்பியாட் பயிற்றுனர்) மற்றும் லெப்டனன் கர்னல் முனைவர் விக்கினேஸ்வரன்( விரிவுரையாளர், மலேசியத் தற்காப்பு பல்கலைக்கழகம்) இவர்கள் இருவரும் சிறப்பான பயிற்சியை வழங்கினர்.

ஒலிம்பியாட் கணிதம் என்றாலே கடினம் என அலறும் ஆசிரியர்கள் இப்பயிற்சிக்குப் பின் எவ்வாறு எளிய முறையில் தங்களின் மாணவர்களுக்குப் போதிக்கலாம் என்பதைக் கற்றுக்கொண்டனர்.பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

பட்டறை முடிவடைவதற்கு முன்பு உரையாற்றிய தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவர் மருத்துவர் செல்வம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் புத்தாக்கப் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை பெறுவதுபோல் கணிதம் சார்ந்த துறைகளிலும் சாதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன