புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிபிஆர் லெம்பா சுபாங் 1 குடியிருப்பாளர்களுக்கான உணவு வங்கி திட்டம் தொடரப்படும்! – மரியா சின் தகவல்
அரசியல்

பிபிஆர் லெம்பா சுபாங் 1 குடியிருப்பாளர்களுக்கான உணவு வங்கி திட்டம் தொடரப்படும்! – மரியா சின் தகவல்

பெட்டாலிங் ஜெயா, ஏப். 30-

     உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஊட்டச்சத்து உணவு பொருள்கள் அடங்கிய உணவு வங்கி திட்டம் இங்குள்ள பிபிஆர் லெம்பா சுபாங் 1  குடியிருப்பாளர்களுக்கு அடுத்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர்  மரியா சின் அப்துல்லா கூறினார்.

  இவ்வட்டாரத்தில் வறிய நிலையில் வாழும் குடும்பங்களின் உணவு தேவையை நிறைவேற்றுவதில் தமது நாடாளுமன்ற அலுவலகத்தின் உணவு வங்கி திட்டம் ஓரளவு பங்காற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்தாண்டு இத்திட்டத்தை அமல்படுத்தியதில் கிடைத்த வெற்றி இவ்வாண்டும் இதனை விரிவாக்கம் காண ஊக்குவித்திருப்பதாக இங்கு இத்திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

         “இந்த உதவி அதிகமானோருக்குத் தேவைப்படுகிறது என்பது இதற்கு  விண்ணப்பம் செய்தோரின் எண்ணிக்கை வழி புலப்படுகிறது. வறுமை காரணமாக பெற்றோர்களுக்குக் கூட சத்துணவு கிடைப்பதில்லை. ஆகையால், இந்த உணவு உண்மையில் தேவைப்படுவோருக்குக் கிடைப்பது உறுதி செய்யப்படும்” என்றார் மரியா சின்.

இக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மற்றவர்களும் பயனடையும் வகையில் அடுத்தாண்டும் இதற்கான பதிவு நடைபெறும் என்று அவர் மேலும் சொன்னார். அதே வேளையில், இத்திட்டத்தில் இடம் பெற்ற 121 குடும்பங்களின்  (458பேர்) வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்குச் சுகாதார நடவடிக்கைகளோடு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களையும் தாங்கள் நடத்தவிருப்பதாக அவர் விவரித்தார்.

       மாதம் 1,500 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு உணவு வங்கி திட்டம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அப்போது 20 குடும்பங்கள் மட்டுமே பங்கேற்றன.  இவ்வாண்டு  121 குடும்பங்களாக  அதிகரித்துள்ளன. இவர்களுக்கு மாதத்தில் இரு முறை உணவு வழங்கப்படும். முதலில் வருவோருக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில் கூடையில் இருக்கும் உணவு பொருள்களை இவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

      இத்திட்டத்தில் சேர ஒரு குடும்பத்தில் 6 பேர் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரோ அல்லது பராமரிப்பின் கீழ் இருப்பவர்களோ பேறு குறைந்தவர்களாகவோ அல்லது கடும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கவோ வேண்டும். தனித்து வாழும் தாய், தந்தை மற்றும் முதியோர் ஆகியோர் இந்த உணவு வங்கி திட்டத்திற்குத் தகுதி பெறுவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன