2 ஆண்டுகளுக்கு போலீஸ் படைத் தலைவர் பொறுப்பை ஏற்கிறார் அப்துல் ஹமிட் பாடோர் !

0
4

புத்ராஜெயா, மே.2 –

தேசியப் போலீஸ் படையின் புதியத் தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹமிட் பாடோர், இரண்டு ஆண்டுகளுக்கு அந்த பொறுப்பை வகிப்பார் என உள்துறை அமைச்சர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்துள்ளார். தற்போது தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவராக இருக்கும் ஹமிட் பாடோர் வரும் சனிக்கிழமைத் தொடங்கி தேசிய போலீஸ் படைத் தலைவராக பொறுப்பேற்க விருக்கிறார்.

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதின் ஆலோசனையின் அடிப்படையில், மாமன்னர் அவரின் நியமனத்திற்கு, ஒப்புதல் வழங்கி இருப்பதாக முகிடின் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.  தேசிய போலீஸ் படையின் நடப்பு தலைவர், டான் ஶ்ரீ ஃபுசி ஹரூன் வரும் சனிக்கிழமை கட்டாயப் பணி ஓய்வு பெறவிருக்கிறார்.

அவருக்கு பதிலாக, இவ்வாண்டு மே 4-ஆம் தேதி தொடங்கி 2021-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி வரையில்,  அப்துல் ஹமிட் பாடோர் போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்படவிருக்கிறார். 1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி பிறந்த அப்துல் ஹமிட், வெளி உளவுத் துறையின் துணை தலைமை இயக்குநர், சிறப்புப் பிரிவு இயக்குநர் உட்பட பல பதவிகளை வகித்தார்.

அதேவேளையில், 2015-ஆம் ஆண்டில் பிரதமர் துறையில் பணியாற்றியபோது, 1MDB தொடர்பிலான விசாரணையின் காரணமாக முந்தைய அரசாங்கம் அவரை பதவி மாற்றம் செய்தது. போலீஸ் துறையில் வலுவான அனுபவம் கொண்டிருக்கும் அவர், போலீஸ் படையை திறமையாக வழிநடத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக முகிடின் நம்பிக்கை தெரிவித்தார்.