முகப்பு > முதன்மைச் செய்திகள் > விடுமுறையில் சொந்த ஊர் திரும்புவோருக்கு ஏர் ஆசியாவின் கூடுதல் விமான சேவைகள் !
முதன்மைச் செய்திகள்

விடுமுறையில் சொந்த ஊர் திரும்புவோருக்கு ஏர் ஆசியாவின் கூடுதல் விமான சேவைகள் !

சிப்பாங், மே 2 :

விடுமுறைக் காலத்தின்போது நிரந்தர கட்டணத்தின் மூலம் கூடுதல் விமானப் பயணங்களை விமான நிறுவனங்கள் ஏற்பாடு செய்வது குடும்பத்தினரிடையே உறவுகளை ஊக்குவிப்பதற்கு துணைபுரியும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இவ்வாண்டு சீன புத்தாண்டு காலத்தின்போது நள்ளிரவு நேரங்களில் ஏர் ஆசியா ஏற்பாடு செய்த சீனப்புத்தாண்டு விடுமுறைக்கான கூடுதல் பயணங்கள் சிறந்த வெற்றியை பெற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நள்ளிரவுக்கு பின்னர் வீடு திரும்புவோர் விமான டிக்கெட்டுகளை வாங்கியதால் அவை உடனடியாக விற்றுத் தீர்ந்ததையும் அந்தோணி சுட்டிக்காட்டினார்.

சீனப்புத்தாண்டு காலத்திற்கான நள்ளிரவுக்கு பிந்திய கூடுதல் விமான சேவைக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று முடிந்ததைத் தொடர்ந்து காவாய், கெஅமாத்தான் மற்றும் நோன்பு பெருநாளுக்காக கூடுதல் விமான சேவைக்கு அனுமதிக்கும்படி மலேசியா விமான தொழில் துறை ஆணையம் உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தாம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்த முயற்சியில் ஈடுபட்ட ஏர் ஆசியாவுக்கு அவர் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். செலவுகளை குறைக்கும் வகையில் மக்களுக்காக அதிக விமான பயணங்களை ஏற்பாடு செய்யும் தனியார்துறையின் முயற்சிகளுக்கு அமைச்சு ஆதரவு வழங்கும் என்றும் அவர் சொன்னார்.ஒவ்வொரு மிகப்பெரிய விழாக்காலங்களிலும் கூடுதல் விமான பயணங்கள் நிரந்தரமானதாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகளின்போதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி குடும்பத்தினருடன் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என்று ஏர் ஆசியா தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது அந்தோணி லோக் தெரிவித்தார்.

மே 31ம் தேதி மற்றும் ஜூன் 17-ஆம் தேதிக்கு இடையே பயணம் செய்வதற்கான விமான டிக்கெட்டுகள் 99 வெள்ளி முதல் கிடைக்கும். மே 27 மற்றும் 30 ஆம் தேதிக்கிடையே கிழக்கு மலேசியாவுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட கூடுதல் விமான சேவைகளிலும் பொதுமக்கள் பயணம் செய்யலாம்

இதனிடையே 115,000 கூடுதல் இருக்கைகளுக்கு அரசாங்கத்தின் அனுமதியை தாங்கள் பெற்றிருப்பதாக ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார். அலோர் ஸ்டார், கோத்தாபாரு, கோலாத்திரெங்கானு மற்றும் ஜோகூருக்கான ஒரு வழி விமான கட்டணம் 99 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் இருந்து சரவாவுக்கான ஒரு வழி விமான சேவைக்கான கட்டணம் 149 வெள்ளியாகவும் தீபகற்ப மலேசியாவில் இருந்து சபாவுக்கான ஒரு வழி விமான கட்டணம் 199 வெள்ளியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன