புத்தாக்கத் தொழில்நுட்ப ஆராய்ச்சி: கின்ராரா தமிழ்ப்பள்ளி தங்கம் வென்று சாதனை!

0
16

கோலாலம்பூர், மே 5-

அனைத்துலக ரீதியில் நடைபெறும் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் மலேசிய தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சளைத்தவர்கள் அல்லர்  என்பது மீண்டும்  மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்  மாநாட்டு மையத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்துலக  இளம் புத்தாக்க தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுக்கான கண்காட்சியில் புத்தாக்க ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்காக மலேசிய தமிழ்ப்பள்ளிகள் தங்கப்பதக்கங்களை வென்று குவித்துள்ளன.

இதில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பிரிவில் 29 குழுக்கள் பங்கேற்றன.இவற்றில்  10 குழுக்கள் தங்கப் பதக்கங்கள் வென்றன. வெள்ளத் தடுப்பு என்ற தலைப்பிலான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியின் குழுவும் இவற்றில் அடங்கும்.

லினுஷா பழனியப்பன், தணிகன் தமிழரசு, யாஷ்வினா ரகுநாதன் மற்றும்  ஹிரென்யா தேவேந்திரன் ஆகிய மாணவர்களே தங்கம் வென்று   பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்தவர்கள்.

உலகளவிலான புத்தாக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் தமிழ்ப்பள்ளிகள் அடைந்து வரும் சாதனைகளைக் கண்டு  பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை இத்துறையில் ஈடுபட ஊக்குவித்ததாக மாணவன் தணிகனின் தந்தை எஸ்.ஜி.தமிழரசு அனேகன் இணைய தளத்திடம் தெரிவித்தார்.

இது போன்ற அனுபவங்கள் புதிய துறைகள் பற்றி மாணவர்கள்  அறிந்து கொள்வதோடு  இவர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும்  ஊக்குவிக்கும் என்றும் அவர் சொன்னார்.