தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் – ஜ.செ.க தலைவர் வலியுறுத்து!

0
4

ஷா அலாம், மே 6 – 

14ஆவது பொதுத் தேர்தலின் போது தனது கொள்கை அறிக்கையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதற்கான கடப்பாட்டை ஜ.செ.கவும் நம்பிக்கை கூட்டணியும் கொண்டிருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
ஜ.செ.க எனப்படும் ஜனநாயக செயல் கட்சியின் தேசிய தலைவர் டான் கொக் வாய் இதனைத் தெரிவித்தார். ஒராண்டு காலமாக நாட்டை நிர்வகித்த பின்னர் தேர்தல் கொள்கை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதில் நம்பிக்கை கூட்டணி நிருபித்திருப்பதாக அவர் சொன்னார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கப்படும் வாக்குறுதி செய்வதைவிட சொல்வது மிகவும் எளிதானதாகும். ஆனால் நாட்டின் நடப்பு நிதி நிலைமையை கருத்திற்கொண்டு பார்க்கையில் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சில வேளையில் சிரமங்கள் இருப்பதாகவும் டான் கொக் வாய் தெரிவித்தார்.

நம்பிக்கை கூட்டணி நிர்வாகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதியாக மட்டுமே இருந்துவிடக் கூடாது என சுட்டிக்காட்ட விரும்புவதாக அவர் சொன்னார். எப்படிப்பட்ட தடையை எதிர் நோக்கினாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என நேற்று ஷா அலாமில் ஜ.செ.க தேசிய மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நம்பிக்கை கூட்டணி நிறைவேற்றாது என பல்வேறு தரப்பினர் தவறான தோற்றத்தை விளைவிக்க முயற்சித்து வருவதையும் டான்   சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வில் பி கே ஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் , ஜ.செ.க வின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பெரிய அளவில் கடன் சுமைகளுக்கு உள்ளாகியுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளாமலேயே தேர்தல் வாக்குறுதியை இப்போதைய அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது என்ற தவறான தோற்றத்தை சிலர் வெளிப்படுத்தி வருவதாகவும் டான் கொக் வாய் தெரிவித்தார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு ஜ.செ.க போராடும் என்றும் அவர் சொன்னர். இன மற்றும் சமய பாகுபாடு இன்றி மலேசிய குடிமக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக ஜ.செ.க தொடர்ந்து செயல்பட்டு வரும் என்பதோடு நாட்டில் உள்ள மக்களின் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் தொடர்ந்து நிலைநாட்டுவதற்கு கடுமையாக போராடும் என டான் கொக் வாய் கூறினார்.