சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மலாய் மாணவர்களுக்கு பின்புற கதவான மெட்ரிகுலேஷனில் இன்று மற்றவர்களும் நுழைகின்றனர் – துன் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மலாய் மாணவர்களுக்கு பின்புற கதவான மெட்ரிகுலேஷனில் இன்று மற்றவர்களும் நுழைகின்றனர் – துன் மகாதீர்

புத்ராஜெயா மே 6,

மெட்ரிகுலேஷன் கல்வி திட்டம் குறைவான மதிப்பெண்களைப் பெற்ற மலாய்க்கார மாணவர்களுக்கானது. குறைந்த தேர்ச்சி பெற்ற அந்த மாணவர்கள் உள்நாட்டு பொது பல்கலைக்கழகங்களில் அதிகம் இணைவதற்கு உதவும் பொருட்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது என்பதை துன் டாக்டர் மகாதீர் ஒப்புக்கொண்டார்.

எனினும் உயர்கல்வி நிலையங்களில் இணைவதற்கான இந்த பின்புறக்கதவு திட்டத்தை அனைவருக்கும் திறந்து விடுவது என அரசாங்கம் முடிவு செய்ததை அடுத்து, மலேசியாவின் இதர இனங்களைச் சேர்ந்தவர்களும் மெட்ரிகுலேஷன் மூலமாக உயர்கல்வி நிலையங்களில் இணைய வேண்டும் என்ற மனப்போக்கு அதிகரித்துவிட்டதாகவும் துன் மகாதீர் சுட்டிக்காட்டினார்.

மலாய்க்கார மாணவர்கள் உயர் கல்வி சான்றிதழான எச்.எஸ்.சி (H.S.C) எடுப்பதில்லை என்பதால் அவர்களால், பல்கலைக்கழகத்திற்கு இணைய முடியவில்லை என்பதை அப்போது அரசாங்கம் கண்டறிந்ததைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் வகுப்புகளைத் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். எனவே அவர்களுக்காக மெட்ரிகுலேஷன் என்ற பின்புறக்கதவை தாங்கள் ஏற்பாடு செய்ததாக, 1970 ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சராக இருந்தவருமான டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

(H..S.C) தான் பின்னர் எஸ். டி. பி. எம் .என்று அழைக்கப்படுகிறது. ஆறாம் படிவம் மாணவர்கள் இந்த தேர்வை எடுக்கின்றனர். கடந்த காலங்களில் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு இந்தத் திட்டத்தில் குறைவான இடம் என்ற விவகாரம் எழவில்லை. ஆனால் கடந்த மாதம் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் மெட்ரிகுலேஷன் திட்டத்தை விரிவுப்படுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில தரப்பினர் இதனை ஒரு பெரிய விவகாரமாக எழுப்பி வருகின்றனர் என பிரதமர் கூறினார்.

கல்வியில் சிறந்த தேர்ச்சி பெற்றும் மலாய்க்காரர் அல்லாத மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடங்கள் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் வினவியபோது அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் டாக்டர் மகாதீர் இத்தகவலை வெளியிட்டார். எனவே இப்போது மலாய்காரர் அல்லாதவர்களுக்கும் இடங்களைக் கொடுப்பதில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக அவர்  தெரிவித்தார்.

பின்புறக் கதவு வழியாக சீனர்களும் இந்தியர்களும் உயர் கல்வி நிலையங்களில் இணைவதால் மெட்ரிகுலேஷன் மூலம் பல்கலைக்கழகங்களில் மலாய்க்கார மாணவர்களை அதிகரிக்கும் திட்டத்தை ரத்து செய்தோம்  ஆனால் அவர்கள் திருப்தி அடையவில்லை.மெட்ரிகுலேஷன் திட்டங்களில் 90 விழுக்காடு இடங்கள் தொடர்ந்தது பூமிபுத்ரா மாணவர்களுக்கு நிலை நிறுத்தப்படும் என்று ஏப்ரல் 24ம் தேதி கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் அறிவித்திருந்தார். அதோடு 25 ஆயிரமாக இருந்த மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கான மாணவர்களின் எண்ணிக்கை 40,000 ஆக அதிகரிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன