பத்திரிகையாளர்களின் நலன்கள் தொடர்ந்து காக்கப்படும்! – செ.வே. முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர், மே 7-

மக்களுக்குச் சுடச்சுட செய்திகளில் வழங்குவதில் கால நேரம் பாராது உழைப்பைச் சிந்தி வரும் பத்திரிகையாளர்களின் நலன்களைக் காப்பதே மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலையாய கடமை எனத் தெரிவிக்கப்பட்டது.

பத்திரிகைகளில் பணியாற்றி வருவோரின் பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றிற்கு உரிய தீர்வு காண்பதில் சங்கம் தொடர்ந்து முனைப்பு காட்டி வரும் என்று இச்சங்கத்தின் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் கூறினார்.

உடல் நலம் குன்றிய சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி நிதி, தாய் தந்தையரின் மறைவையொட்டி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மரண சகாய நிதி போன்றவை இவற்றில் அடங்கும் என்று இங்கு தலைநகர் ஜாலான் ஈப்போ, ஜெயபக்தி மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் நான்காம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

அவ்வகையில் கடந்தாண்டு நிருபர்கள் தாரா (வெ.1000) மற்றும் தவசேகரன் (வெ.500) ஆகியோருக்கு மருத்துவ சிகிச்சை நிதி வழங்கப்பட்டது. அதே வேளையில், எண்மருக்கு தலா ஆயிரம் வெள்ளி மரண சகாய நிதி வழங்கப்பட்டதாகவும் அவர் விவரித்தார்.

ஆண்டுதோறும் நடைபெறும் குடும்ப தின விழாவில் மூத்த பத்திரிகையாளர்களை கௌரவிக்கும் அங்கமும் இடம்பெறும். பத்திரிகை துறைக்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்படுவதாக முத்தமிழ்மன்னன் சொன்னார்.

இந்த ஆண்டும் பல்வேறு அங்கங்களுடன் குடும்ப தின விழா வரும் ஜூன் 5 ஆம் தேதி (பொது விடுமுறை) காலை 10.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை தலைநகர் ஜாலான் செந்தூல் பாசார், செயிண்ட் ஜோசப் தேவாலய மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

புதுப்புது செய்திகளைச் சேகரித்து வழங்குவதன் வழி செய்தியாளர்கள் பத்திரிகையின் மேன்மைக்குப் பாடுபட வேண்டும் என்று நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.எம். சுந்தர் குறிப்பிட்டார்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு பணியாளர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அதே போலவே சங்கத்தின் மேம்பாட்டிற்கு உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்றார்.

பொதுக் கூட்டம் குறித்த கலந்துரையாடல், மூத்த பத்திரிகையாளர்கள் சிலரின் உரைகள், 2019 குடும்ப தின விழா பொறுப்பாளர்கள் அறிவிப்பு ஆகியவற்றுடன் சங்கத்தின் பொதுக் கூட்டம் மதிய உணவுடன் இனிதே நிறைவுற்றது.