புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வாகனங்களில் கருமையாக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்த அனுமதி – போக்குவரத்து அமைச்சு
அரசியல்முதன்மைச் செய்திகள்

வாகனங்களில் கருமையாக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்த அனுமதி – போக்குவரத்து அமைச்சு

வாகனங்களில் கருமையாக்கப்பட்ட கண்ணாடிகளைப் (டின்டெட்) பயன்படுத்தும் விண்ணப்பத்திற்கான புதிய விதிமுறையை போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால் அதில் சில கடுமையான நிபந்தனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவ்வமைச்சு கூறியிருக்கிறது.

அரசாங்கத்தின் வருமானத்தை பெருக்கவும், இந்த புதிய விதிமுறை உதவும் என்று அதன் அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்திருக்கின்றார். புத்ராஜெயாவில், செவ்வாய்கிழமை வாகனக் கண்ணாடிகளைக் கருமையாக்கப்படுவது தொடர்பாக நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அந்த செயற்குழுவில் ஆராயப்படாமல், வாகனக் கண்ணாடிகளைக் கருமையாக்கப்படுவதற்கு ஒப்புதல் வழங்க அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார். அதற்கான விண்ணப்பத்திற்கு 50 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும். அந்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை புதுப்பிக்க, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஐந்தாயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த கட்டணங்கள், அரசாங்கத்திற்கான வருமானமாக கணக்கிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த அம்சங்களில், சாலை போக்குவரத்து இலாகா நிர்ணயம் செய்திருக்கும் விதிமுறைகளை விண்ணப்பம் செய்வோர் பின்பற்றி இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வாகனங்களின் பயணிகள் இருக்கைக்கு அருகில் இருக்கும் கண்ணாடிகள் மற்றும் பின்புற கண்ணாடிகள் முழுமையாக கருமையாக்க, மே 8-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.அதோடு, பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்கள் போன்ற சிறப்பு காரணங்களுக்காக வாகனமோட்டியின் இருக்கைக்கு அருகில் இருக்கும் கண்ணாடியை மேலும் கருமையாக்க வாகன உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் லோக் கூறினார். இந்த ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் சேவை வரி விதிக்கப்படுகிறது.

தற்போது வாகனமோட்டியின் இருக்கைக்கு அருகில் இருக்கும் கண்ணாடியின் வெளிச்சம் ஊடுறுவும் அளவு 30 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு, வாகனங்களின் பயணிகள் இருக்கைக்கு அருகில் இருக்கும் கண்ணாடி மற்றும் பின்புற கண்ணாடிகளின் வெளிச்சம் ஊடுறுவும் அளவு 30 விழுக்காட்டிலிருந்து, 70 விழுக்காடு மற்றும் அதற்கு குறைவான அளவை ஒவ்வொரு வாகனமோட்டியும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன