உப்சி பல்கலைக்கழகத்திலும் ஏமாற்றம்! ஒரு முனைவரின் மனக்குமுறல்

கடந்த ஆண்டு இதே தேதியில் 14வது பொதுத் தேர்தல் நடந்தது. நாடு மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பதாக சுட்டிக்காட்டிய எதிர்கட்சிகள், புதிய மலேசியாவை உருவாக்குவதற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என மக்களிடம் கோரிக்கை வைத்தனர்.

அதோடு இந்திய சமுதாயத்தின் அடிப்படை பிரச்சினைகளை 100 நாட்களில் திருத்தி விடுவோம் என்ற மிகப்பெரிய வாக்குறுதியையும் வழங்கியிருந்தார்கள். இன்றோடு தேர்தல் நடந்து ஓராண்டு ஆகின்றது.

100 நாட்கள் வாக்குறுதி உட்பட இனிய சமுதாயத்தின் பிரச்சனைகள் களையப்பட்டதா என்ற கேள்வி இங்கு முன்வைக்கப்படுகின்றது. இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனை, மெட்ரிகுலேஷன் விவகாரம், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு, அரசாங்கத்தின் கட்டுமான குத்தகைகள் இந்தியர்களுக்கு வழங்கப்படுவது, அரசு துறைகளில் பதவி உயர்வு என அனைத்து துறைகளிலும் இந்திய சமுதாயம் மேம்பாடு கண்டுள்ளதா?

என்ற விவாதம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் உப்சி பல்கலைக்கழகத்தில், தமிழ்த்துறையில் முதுகலை, முனைவர் ஆய்வுகளை தமிழில் செய்ய முடியாது என்ற சூழ்நிலை இப்போது எழுந்துள்ளது. இதன் தொடர்பில் முனைவர் எஸ்.வி. சிவலிங்கம் தமது மன வருத்தத்தை பதிவு செய்து இருக்கின்றார்.

மலைநாட்டு அரசாங்கச் சட்டத்தில் தமிழ்க் கல்விக்கும் அங்கீகாரமுண்டு. இஃது ஆரம்பப் பள்ளி தொட்டு பல்கலைக்கழகம் வரையிலும் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது. இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தை அடுத்து தஞ்சோங் மாலிம் ‘உப்சி’ (UPSI) பல்கலைக்கழகத்திலும் இந்திய ஆய்வியல் துறை, தமிழ்த்துறை இயங்கி வருகின்றது.

இதில் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறைக்கு இல்லாத ஒரு சிறப்பு ‘உப்சி’ தமிழ் துறைக்கு உண்டு. அதுதான் எம்.ஏ (M.A) பிஎச்.டி (Ph.D) பட்ட ஆய்வேடுகளைத் தமிழ் மொழியிலும் சமர்ப்பிக்கலாம் என்பதாகும்.  தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டு, பல்கலைக் கழக சட்ட விதிமுறை ஆவணங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த விதிமுறையை நம்பிக்கையோடு ஓட்டுப் போட்டு ஆட்சி பீடம் ஒற்றிய நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியில் மறுக்கப் படுகிறது.

பல்கலைக் கழக கல்வித்துறை அதிகாரிகள் பதவி ஏற்றம் பெற்று அந்த நாற்காலிகளில் அமரும் பொழுதில் ஆவணப் படுத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை மறந்து/மறைத்து தன்மூப்பாக இனமொழி துவேசம் கொண்டு கல்விச் சட்டத்தையே வளைக்கிறார்கள்.

இது குறித்து கேள்வி எழுப்பினால் ஒரு அதிகாரி சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் குறித்த ஆய்வுகளைத் தமிழில் படைக்கலாம்; மாறாகத், தற்கால இலக்கிய ஆய்வுகளை மலாய் அல்லது ஆங்கில மொழியில் படைக்க வேண்டும் என்கிறார். மற்றொரு கல்வியதிகாரியோ அப்படி அல்ல, அனைத்து ஆய்வுகளையும் மலாய் ஆங்கிலத்தில்தான் படைக்க வேண்டும் என்று திடீர் சட்டம் போடுகிறார். பல்கலைக் கழக சட்ட விதிமுறையைச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினால் தமிழில் எழுதுவதானது வெளிநாட்டு மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகை என்று வியாக்யானம் செய்கிறார்.

சங்க இலக்கியமும் பக்தி இலக்கியமும் உணர்ச்சி பூர்வமான படைப்புகள். கவிதையின் உயிர் நாடியே உணர்ச்சிதானே? இந்தத் துறை சார்ந்த ஆய்வுகளை உணர்ச்சியைக் கொன்று அறிவையே பிரதானப் படுத்த படைப்பது பிணத்துக்கு அலங்காரம் செய்து ரசிப்பதற்கு ஒப்பாகும்; நான்கு நாட்களில் நாறிவிடும். இந்த வகை ஆய்வு பின்னர் எடுப்பாரும் படிப்பாரும் இன்றிப் போய்விடும். இது குறித்து வேற்று இன அதிகாரிகளுக்குக் கவலை இல்லை.

தொடக்கத்தில் தமிழிலும் செய்யலாம் என்ற விதிமுறையை நம்பி பக்தி இலக்கியத்திலும் சங்க இலக்கியத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு முடித்து விட்ட நிலையில் என்னால் ஊக்கப்படுத்தப்பட்டு ஆய்வை முடித்த மாணவர்கள் ஏமாற்றத்தோடும் ஆதங்கத்தோடும் என் முகத்தைப் பார்க்கும் வேதனை தாளாமல் பத்திரிக்கையின் வாயிலாக மறுக்கப்பட்டிருக்கும் உரிமை நாடுகிறேன். மகாதீர் என்பதால் துன் மகாதீரை நம்பி ஓட்டுப் போட்டோம். தயவு செய்து எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு வேட்டுப்போட்டு விடாதீர்கள்.

‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி குறுக்கே நிற்கிறார்’ என்பதுதான் நமது கல்வித்துறையின் நிதர்சனமான உண்மை.

முனைவர் எஸ்.வி. சிவலிங்கம்