அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > அவ்பாமேயாங்கின் ஹாட்ரீக் கோல்களினால் இறுதி ஆட்டத்தில் அர்செனல் !
விளையாட்டு

அவ்பாமேயாங்கின் ஹாட்ரீக் கோல்களினால் இறுதி ஆட்டத்தில் அர்செனல் !

வலென்சியா, மே.10 –

கபோன் ஆட்டக்காரர் பியேரி அமெரிக் அவ்பாமேயாங் அடித்த மூன்று கோல்களின் வழி இங்கிலாந்தின் அர்செனல், யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தேர்வாகி இருக்கிறது. வியாழக்கிழமை ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள மெஸ்தால்லா அரங்கில் அர்செனல் 4 – 2 என்ற கோல்களில் வலென்சியாவை வீழ்த்தியது.

கடந்த வாரம் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்செனல் 3 – 1 என்ற கோல்களில் வலென்சியாவைத் தோற்கடித்தது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அர்செனல் கடும் சவாலை எதிர்நோக்கும் என கணிக்கப்பட்ட வேளையில் அவை அனைத்தையும் அர்செனல் தவிடுப் பொடியாக்கியது.

கேவின் கமேரோ போட்ட கோல் வலென்சியாவுக்கு நல்லதொரு துவக்கத்தைக் கொடுத்தது. இருப்பினும் பியேரி எமெரிக் அவ்பாமேயாங் போட்ட கோலின் மூலம் அர்செனல் ஆட்டத்தை சமப்படுத்தியது. முதல் பாதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் லக்கசாட் போட்ட கோலின் வழி அர்செனல் மீண்டும் 2- 1 என்ற கோல்களில் முன்னணிக்குச் சென்றது. எனினும் கேவின் கமேரோ போட்ட கோலின் மூலம் வலென்சியா ஆட்டத்தை சமப்படுத்தியது.

பியேரி எமெரிக் அவ்பாமேயாங் போட்ட இரண்டு கோல்கள், வலென்சியாவின் வெற்றி வாய்ப்பைப் பறித்தது. இந்த வெற்றியின் வழி பாக்குவில் நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் அர்செனல் தனது இடத்தை உறுதிச் செய்துள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அர்செனல், சாம்பியன்ஸ் லீக் கிண்ண வாய்ப்பை நழுவ விட்டுள்ளது.

இந்நிலையில் யூரோப்பா லீக் கிண்ணத்தை வெல்வதன் வழி அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு முன்னேற அர்செனல் இலக்குக் கொண்டுள்ளது. யூரோப்பா லீக் கிண்ண இறுதி ஆட்டத்தில் அர்செனலும், செல்சியும் மோதவிருக்கின்றன. அதேவேளையில் சாம்பியன்ஸ் லீக் கிண்ண இறுதி ஆட்டத்தில் லிவர்புலும், டோட்டேன்ஹேம் ஹோட்ஸ்பரும் சந்திக்கவிருக்கின்றன. இந்த பருவத்தில் ஐரோப்பியப் போட்டிகளில் இங்கிலாந்து கிளப்புகள் அதிரடிப் படைத்திருக்கின்றன. முதல் முறையாக இரண்டு இறுதி ஆட்டங்களிலும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிளப்புகள் மட்டுமே மோதவிருக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன