புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி! உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி! உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம்

கிள்ளான் மே 11-

நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் முழு நம்பிக்கையை பெற்ற நபராக விளங்கும் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் இந்தியர்களுக்கான புதிய அரசியல் கட்சி உருவாகவிருக்கிறது. உணர்வு மிக்க இளைய சமுதாயத்தை அரசியல்வாதிகளாக உருவாக்கும் உயரிய நோக்கத்தை அந்தக் கட்சி கொண்டிருக்கும் என ஓம்ஸ் தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை இக்கட்சி முன்னெடுக்கும். குறிப்பாக கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புகள் என இந்நாட்டில் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதை கருத்தில் கொண்டே இந்த அரசியல் கட்சி உதயமாகவிருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

வன்னியர் சங்கம், அதன் உறுப்பினர்கள், தமிழ்மலர் நாளிதழ் நிறுவனம் என என்னை சார்ந்த அனைவரும் கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்திடம் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செயல்பட்டனர். கடந்த அரசாங்கத்திற்கு எல்லா வகையிலும் நாங்கள் உதவி புரிந்திருந்தாலும், அனைத்து நிலைகளிலும் நம்பிக்கைக் கூட்டணிக்கு நாங்கள் ஆதரவாகவே இருந்து வந்துள்ளோம்  என மலேசிய வன்னியர் நலபிவிருத்தி சங்கத்தின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஓம்ஸ் தியாகராஜன் செய்தியாளர்களை சந்திக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மத்திய செயலவை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்…

தற்போது நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் எங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளது. குறிப்பாக எனக்கும் மிகச்சிறந்த மரியாதையை வழங்குகின்றார்கள். இத்தருணத்தில் இந்தியர்களின் தேவையை அறிந்து அதற்கான செயல் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒரு அரசியல் கட்சியை தோற்றுவிப்பது மிக அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்த செங்குட்டுவன் திடீரென நீக்கப்பட்டது தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக அவரின் சாதியை பின்புலமாக வைத்து அந்த பதவி வழங்கக்கூடாது என நான் கூறியதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பினார்கள். ஒரு சாதிக்காக நான் பாடுபடுவதாகவும் என்மீது குற்றம் சாட்டினார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த போதிலும், மாணவர்களின் கல்வி, ஆலயம் சார்ந்த விஷயங்களில் சாதி பார்த்து யாரிடமும் பழகுவதில்லை என தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் ஆலயத்திற்கும் தொடர்ந்து நிதி உதவியை வழங்கி வருபவருமான ஓம்ஸ் தியாகராஜன் திட்டவட்டமாக கூறினார்.

நாட்டில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் பல்வேறான அரசுசாரா இயக்கங்கள் இருக்கின்றன. அவைகள் விருப்பப்பட்டால் அதன் பிரதிநிதிகளையும் கட்சியில் இணைத்து அவர்களோடு இணைந்து ஒரே குடையின் கீழ் இந்திய சமுதாயத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசியல் கட்சி இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் சாத்தியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலில் இளைய சமுதாயத்தின் பங்களிப்பு காலத்தின் கட்டாயம். அதனால் சிறந்த தலைமைத்துவம் மிக்க இன உணர்வு கொண்ட இளைஞர்களை தலைவர்களாக உருவாக்க இந்த கட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார் அவர். அதோடு தொழில் துறையில் மேம்பாடு கண்ட வர்த்தக சமுதாயமாக இந்திய சமுதாயத்தை உயர்த்துவதற்கான செயல்திட்டங்களும் அடையாளம் காணப்படும். அதேபோல் கடந்த காலங்களில் விளையாட்டுத் துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாகக் காணப்பட்டது. மணி ஜெகதீசன், கோல் காவலர் ஆறுமுகம், பச் குணாளன் என பலர் இந்திய சமுதாயத்தின் அடையாளமாக இருந்தார்கள். அவர்களை போன்ற விளையாட்டுத் துறையில் சாதிக்கும் இளைய சமுதாயத்தையும் உருவாக்குவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கும் கட்சியாக இந்த புதிய கட்சி செயல்படும். இந்திய சமுதாயத்தின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் அதே நேரத்தில் அவர்களின் தேவைகளை அரசாங்கத்தின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று, பிரச்சினைகளை உடனுக்குடன் களைவதற்கான செயல்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என ஓம்ஸ் தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளில் சமயக் கல்வி உட்பட பல செயல் திட்டங்களை இந்த அரசியல் கட்சி கொண்டுள்ளது. இதன் அறிமுக விழாவில் கட்சி குறித்த அனைத்து விவரங்களும் விரிவாக்கம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மலேசிய வன்னியர் நலபிவிருத்தி சங்கத்தின் உயர்மட்ட மற்றும் மத்திய செயலவை காண வேட்புமனுத்தாக்கல் சனிக்கிழமை நடந்தது. இதில் நடப்பு தலைவர் ஓம்ஸ் தியாகராஜனை எதிர்த்து யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் மீண்டும் அவர் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சங்கத்தின் துணைத் தலைவராக கிருஷ்ணன் கோபால், செயலாளராக பாண்டி தேவன், துணைச் செயலாளராக தவசீலன், பொருளாளராக கார்த்திகேயன், உள் கணக்காய்வாளர் பதவிக்கு நடராஜா, சேரன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 20 மத்திய செயலவை பதவிகளுக்காக 23 பேர் போட்டியிடுகின்றனர். அதற்கான தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகின்றது.

2 thoughts on “ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி! உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம்

  1. சிவா

    சாதி என்கின்ற திராவிட துர்நாற்றத்தை வேரறுத்து,தமிழர் குடிகளாக/குலங்களாக ஒன்றுணைவோம்…

  2. மணிமொழி வீராசாமி

    #wedontneedcastesytemhere

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன