அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை தற்காத்தது மென்செஸ்டர் சிட்டி !
விளையாட்டு

இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை தற்காத்தது மென்செஸ்டர் சிட்டி !

பிரைடன், மே.13-

2018/19 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வென்று  மென்செஸ்டர் சிட்டி வரலாறு படைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 4 –  1 என்ற கோல்களில் பிரைடன் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் 98 புள்ளிகளுடன் மென்செஸ்டர் சிட்டி லீக் பட்டத்தைத் தற்காத்துக் கொண்டது. கடந்த பருவத்தில் 100 புள்ளிகளுடன் லீக் பட்டத்தை அடைந்த மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் குவார்டியோலா இம்முறை 98 புள்ளிகளுடன் அதே பட்டத்தை வென்றிருப்பது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

2009 ஆம் ஆண்டில் மென்செஸ்டர் யுனைடெட் , லீக் பட்டங்களை தொடர்ச்சியாக மூன்று முறை வென்றது சாதனையாக இருந்தது.  அதன் பின்னர் எந்த ஒரு நடப்பு வெற்றியாளரும்  பிரீமியர் லீக் பட்டத்தைத் தற்காத்துக் கொண்டதில்லை. தற்போது பெப் குவார்டியோலாவின் கிளப் அந்த சாதனையைப் படைத்துள்ளது.

பிரைடனுக்கு எதிரான ஆட்டத்தில் 27 ஆவது நிமிடத்தில் முதல் கோலை விட்டிருந்தாலும் மென்செஸ்டர் சிட்டி பதற்றம் அடையவில்லை . தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வென்ற மென்செஸ்டர் சிட்டி, செர்ஜியோ அகுவேரோ, ஆய்மெரிக் லப்போர்த்தே மூலம் இரண்டு கோல்களைப் போட்டு தக்க பதிலடி கொடுத்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்த சிட்டி ரியாட் மாஹ்ரேஸ், இல்கி குண்டோகன் மூலம் மேலும் இரண்டு கோல்களைப் போட்டு தனது வெற்றியை உறுதிச் செய்தது. பெப் குவார்டியோலாவின் வருகைக்குப் பின்னர் இங்கிலாந்தின் அசைக்க முடியாத கிளப்பாக உருவெடுத்திருக்கும் மென்செஸ்டர் சிட்டி ஆறாவது முறையாக லீக் பட்டத்தை வெல்கிறது. அதேவேளையில் கடந்த 7 ஆண்டுகளில் நான்காவது முறையாக லீக் பட்டத்தை தன் வசமாக்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன