அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > அடிப் மரணத்திற்கு பழிவாங்க பயங்கரவாதம்- படுகொலை சதித்திட்டம்!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அடிப் மரணத்திற்கு பழிவாங்க பயங்கரவாதம்- படுகொலை சதித்திட்டம்!

கோலாலம்பூர் மே 14-

தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக படு கொலை சதித் திட்டம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் 4 சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த நால்வரும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை தாக்கும் இலக்கை கொண்டிருந்ததாக போலீஸ் படை தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் கூறினார். இந்த சதி கும்பலைச் சேர்ந்த எஞ்சிய நபர்களை தேடும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு மலேசிய ஆடவர், இரண்டு ரோஹின்யா நபர்கள் மற்றும் இந்தோனேசிய நபர் ஆகியோர் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பயங்கரவாத துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர்களால் மே 5 ஆம் தேதிக்கும் மே 7ஆம் தேதிக்குமிடையே கைது செய்யப்பட்டதாக அப்துல் ஹமிட் கூறினார்.

ஐ எஸ் இயக்கத்தைக் சேர்ந்த இந்த தீவிரவாதிகள் முகமட் அடிப்பின் மரணத்திற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் ரமலான் மாதத்தின் முதல் வாரத்தில் நான்கு முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் இந்து ,பௌத்த ஆலயங்களுடன் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் அப்துல் ஹமிட் கூறினார். சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது மரணமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழிதீர்க்கும் வகையில் ரமலான் மாதத்தின் முதல் வாரத்தில் இந்த தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக அந்த நான்கு சந்தேக பேர்வழிகளும் ஒப்புக்கொண்டதாக ஐ.ஜி.பி தெரிவித்தார்.

ரோஹின்யா ஆடவர்களில் ARSA எனப்படும் அராக்கான் ரோஹிங்யா மீட்சி ராணுவத்தின் உறுப்பினரான ஒருவன் கோலாலம்பூரில் உள்ள மியன்மார் தூதரகத்தை தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தோடு மியன்மார் ராஹ்னி மாநிலத்தில் புனிதப் போரை நடத்துவதற்கும் திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார்.

இந்த தீவிரவாத கும்பலின் முக்கிய நபர் என நம்பப்படும் 34 வயதுடைய ஆடவன் மே 5ஆம் தேதி திரெங்கானுவில் முதலாவதாக கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து ஒரு துப்பாக்கி,15 தோட்டாக்கள் ஆறு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து மே 7ஆம் தேதி இதர நபர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு ரோஹின்யா ஆடவர்களில் ஒருவனுக்கு 20 வயது மற்றொருவனுக்கு 25 வயதாகும்.

இவர்களில் ஒருவன் ஐ.நா அகதிகளுக்கான ஆணைக்குழுவின் அடையாள அட்டையை வைத்திருந்தான். இவர்கள் கோலாலம்பூரில் பழைய கிள்ளான் சாலையில் கைது செய்யப்பட்டனர். தகர கம்பெனியில் வேலை செய்து வந்த இந்தோனேசியா ஆடவன் சுபாங் ஜெயாவில் கைது செய்யப்பட்டான்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது விரைவில் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும். இந்த கும்பலைச் சேர்ந்த மூவர் இன்னும் தலைமறைவாக இருப்பதால் அவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன