அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இந்திய முஸ்லிம் சமூகத்தினர் கொடுக்கும் கரங்களாக மாற வேண்டும்! -டத்தோ அப்துல் ஹமிட்
சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்திய முஸ்லிம் சமூகத்தினர் கொடுக்கும் கரங்களாக மாற வேண்டும்! -டத்தோ அப்துல் ஹமிட்

சிப்பாங், மே 14-

       பிறர் துயரைப் போக்கி, அனைவரிடத்திலும் சகோதரத்துவ உணர்வை மேலோங்கச் செய்ய இந்திய முஸ்லிம் சமுதாயத்தினர் கொடுக்கும் கரங்களாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.          ஒரு காலத்தில் சிரமப்பட்டடதால் மற்றவர்களிடமிருந்து உதவி பெற நேரிட்டாலும் இந்நிலை மாறும்போது மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஏஸான் குழும தலைமை நிர்வாகி டத்தோ ஹாஜி   அப்துல் ஹமிட் ஆலோசனை கூறினார்.

         வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்பார்கள். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இச்செயல்  மற்றவர்களுக்குத் தெரிந்தால்தான் பணம் படைத்தவர்களும்  சிரமப்படுவோருக்கு உதவ முடியும் என்று இங்கு  ஹேசான் குழுமத்தின் ஏற்பாட்டிலான நோன்புப் பெருநாள் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

          ஹேசான் குழுமம் 21 ஆவது வருடமாக நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கி வருவதாகவும் சிப்பாங்  வட்டாரத்தில் டத்தோ இப்ராகிம் ஷா தலைமையில் கடந்த10 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

       புனித ரமலான் மாதத்தையொட்டி ஓர் இடத்தில் சுமார் 300 பேர் என  நாடு முழுவதும் 38 இடங்களில் அரிசி மற்றும் ரொக்க  அன்பளிப்புகளை இந்திய முஸ்லிம் மக்களுக்குத் தாங்கள் வழங்கி வருவதாக அவர் மேலும் கூறினார்.

அவ்வகையில் இவ்வார இறுதியில் காஜாங்கில் 1,000 பேருக்கு இந்த அன்பளிப்புகளைத் தாங்கள் வழங்கவிருப்பதாகவும் அவர் சொன்னார். “நான் தமிழ்ப்பள்ளியில் படித்தேன். ஆகையால், தெரிந்தும் தெரியாமலும் தமிழ்ப் பள்ளிகளுக்காகவும் நாங்கள் நிறைய செய்து வருகிறோம். எங்களின் இந்நடவடிக்கை மற்றவர்களுக்கு ஓர்  எடுத்துக் காட்டாக  இருக்க வேண்டும்” என்றார் அப்துல் ஹமிட்.

       இதனிடையே, நோன்பு மாதத்தில் டத்தோ ஹமிட்டும் அவரின் துணைவியாரும் வருடந்தோறும் இந்த உன்னத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறித்து சாலாக் திங்கி இந்திய முஸ்லிம் மேம்பாட்டு சங்க தலைவர் டத்தோ இப்ராகிம் ஷா ஷாகுல் ஹமிட்  பாராட்டு தெரிவித்தார்.

      இவர்களின் இந்த உன்னத நடவடிக்கை சிரமப்படும்    சுற்று வட்டார இந்திய முஸ்லிம் சமூகத்தினருக்கு மனநிறைவைத் தரும் என்பது நிச்சயம் என்றார்.  அதே சமயம், ஹஜ் யாத்ரீகர்களின் புனித பயணத்திற்கும் இவர்கள் உதவி வருவது இந்திய முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டில் இவர்கள் கொண்டுள்ள அக்கறையையே காட்டுகிறது என்று இப்ராகிம் ஷா விவரித்தார்.

      சாலாக் திங்கி தாமான் அங்கிரீக் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 பேருக்கு அரிசி மற்றும் தலா 150 வெள்ளி அன்பளிப்பு வழங்கப்பட்டன. ஹேசான் குழுமத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இப்ராகிம் ஷா நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் டத்தோ சைட் முகமது அலி, டத்தோ ஜவஹர்லால் அலி, முஜிபுர் ரஹ்மான், காசிம் ஆகியோரோடு பள்ளிவாசல் மற்றும் இந்திய முஸ்லிம் சங்க பொறுப்பாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன